Skip to main content

"சுதியை மாற்றிய தங்க தமிழ்ச்செல்வன்..!.காலியாகிறது அமமுக கூடாரம்...!!''

Published on 13/12/2018 | Edited on 13/12/2018

18 தொகுதிகளிலும் நாங்கள் மக்களை சந்தித்தோம், தேர்தலை சந்திக்க சொன்னார்கள். அதனால், மேல்முறையீடு செய்யவில்லை என்று செய்தியாளர்கள் மைக்கை நீட்டும் போதெல்லாம் கிளிப்பிள்ளை போல சொன்னார் தங்க தமிழ்செல்வன். அவரே இப்போது மேல்முறையீடு செய்யப்போகிறோம் என்று சுதியை மாற்றியிருக்கிறார்.

 

ttv

 

 

அதற்கு காரணம் என்ன? என்று விசாரித்தோம். "எல்லாம் விட்டமின் 'ப' தான் காரணம். ஒவ்வொரு மாதமும் 'படி' அளக்கப்படும் என்ற உத்திரவாதத்தை நிறைவேற்றவில்லை. தேர்தலை சந்திக்கும் போது ஆகுற செலவை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என கறார் காட்டியதும்  மற்றொரு காரணம். ஒரு பக்கம் தினகரன் கூடாரத்தை கலகலக்க வைக்க எடப்பாடி தரப்பு இறங்கி வேலை செய்கிறது. இங்கே இருக்கிற பட்சிகளை தக்க வைக்க முடியவில்லை. செந்தில் பாலாஜியை தொடர்ந்து அடுத்து 6 விக்கெட்டுக்கள் ரெடியாக இருக்கிறது" என்றார் அமமுகவிற்கு நெருக்கமான அந்த நண்பர்.

 

இப்போது மேல்முறையீட்டுக்கு போவோம் என்று சொல்வதற்கு தங்க தமிழ்செல்வன் சொல்லும் காரணம் ஏற்கும் படியாக இல்லை. "தேர்தலில் போட்டியிட நாங்க 18 பேரும் மனு செய்தால், அதை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்வார். ஏனெனில் தேர்தல் பணியாற்றுகிற ரிட்டர்னிங் ஆபிஸர்ஸ் எல்லாம் எடப்பாடி ஆளுங்க. அதனால் நாங்கள் மேல்முறையீடு செய்யப்போகிறோம் '' என்கிறார் தங்க தமிழ்செல்வன். இதை கேட்டா சின்னப்புள்ள கூட சிரிக்கும். 

 

ஒரு மனுவை எந்தெந்த காரணங்களுக்கு அதிகாரி தள்ளுபடி செய்வார் என்றால், அந்த மனுவை நிரப்பும் போது, அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட வேண்டும், முன் மொழிபவர், வழிமொழிபவர் விபரம், சொத்து விபரம், நிலுவையில் உள்ள வழக்கு விவரம் எல்லாம் தெளிவாக இருந்தால், யாராலும் தள்ளுபடி செய்ய முடியாது. குறைபாடு இருந்தால் கண்டிப்பாக தள்ளுபடி ஆகும். (கடந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிட மனு செய்த ஜெ. தீபா, தனது மனு தள்ளுபடி ஆக வேண்டும் என்றே, கணவர் பெயரை குறிப்பிடவில்லை). இப்போது உள்ள சூழ்நிலையில் தேர்தலில் போட்டியிடாமல், இன்னும் காலம் கடத்தலாம் என்கிற எண்ணத்தில் தான் அப்பீலுக்கு போவோம் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கின்றனர்.

 

இந்த நிலையில், செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவுகிறார் என்பது வெளிப்படையாக தெரிந்து விட்டது. இதே மன நிலையில் இன்னும் 6 பேர் இருக்கின்றார்களாம். ஆக,  தினகரன் அணிக்கு இது இலையுதிர் காலம் போல.!

 

 

சார்ந்த செய்திகள்