உச்சநீதிமன்ற நீதிபதிகள் எப்படியெல்லாம் தீர்ப்பினை வழங்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்திற்கும் மேலாக அதிகாரம் படைத்தவர்போலப் பேசியிருக்கும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷாமீது உரிய நடவடிக்கையை உச்சநீதிமன்றம் எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷா ராஜாவை மிஞ்சிய ‘ராஜ விசுவாசி.’ அவரது ஆணவத்திற்கு அளவே இல்லை! அவர் ஏதோ தேர்தலில் மிகப்பெரிய வித்தைக்காரர் என்றெல்லாம் நினைத்து, உள்ளடி வேலைகளையும், கட்சிகளையும், அதிருப்தியாளர்களையும் அடையாளம் கண்டு அரசியல் சந்தையில் அவர்களை விலைக்கு வாங்கியே வித்தகர் என்று கூறப்படும் ஒரு வினோத அரசியல்வாதி!
அமித்ஷா எப்படிப்பட்டவர்?
அவர்தான் பிரதமர் மோடிக்கு ‘‘மனச்சாட்சியாம்!’’ வெற்றிக்குப் பாதையமைத்து, மகுடத்தை மோடி தலையில் வைத்தவர் என்றெல்லாம் கூறப்படுகிறது!
‘‘(நியாயமான) முறைகளைப்பற்றிக் கவலைப்படாமல், முடிவுதான் எனக்குத் தேவை’’ எனும் வேலைத் திட்டத்துடன் பண பலம், ஆட்சி பலம், மிரட்டல், உருட்டல் பலம் - இவைமூலம் தான் நினைத்ததை செய்து வருபவர்.
அவர் கேரளாவிற்குச் சென்று அங்கே, அவரது ‘சிந்தனை முத்துக்களை’ அவிழ்த்துக் கொட்டியுள்ளார்!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எப்படி தங்கள் தீர்ப்பை எழுதவேண்டும் என்று அவர்களுக்கு வகுப்பு எடுப்பதுபோல -
‘‘உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடைமுறை சாத்தியமான வகையில் எதைச் செயல்படுத்த முடியுமோ - அதற்கேற்ப தங்களது தீர்ப்புகளை எழுதிட வேண்டு’’மென்ற கருத்துப்பட பேசியுள்ளார்.
ஆளும் கட்சியின் தேசிய தலைவரின் இத்தகு பேச்சு, நாடு எங்கே போகிறது? என்ற கேள்வியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. ஜனநாயகம் ஆட்சி செய்யவேண்டிய இடத்தில், பாசிசத்தின் குரல் ஓங்கி முழக்கமாகி வருகிறது!
ஏற்கெனவே பா.ஜ.க.வின் பிரமுகர் ஒருவர் ‘உச்சநீதிமன்றம் எங்கள் கையில் இருக்கிறது’ என்றும்கூடப் பேசியுள்ளார்!
இதுகுறித்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ள கருத்து மிகவும் முக்கியமானது.
கேரள முதலமைச்சரின் கண்டனம்
“Who are you trying to threaten, the Supreme Court? Your intention behind threatening Supreme Court was evident. The Supreme Court is going to hear the Babri Masjid case. You want the Supreme Court to pronounce its verdict according to your direction,” Vijayan said in his address at a public meeting in Palakkad on Sunday evening.
‘‘சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பு கூறிய நீதிமன்றத்தை மிரட்டுவதற்கு நீவீர் யார்? உங்களது மிரட்டல் நீதிமன்றத்தின் நடைமுறையைப் பாதிக்கும். அதன் விவகாரங்களில் தலையிடும் போக்குக் கண்டிக்கத்தக்கது. விரைவில் உச்சநீதிமன்றம் பாபர் மசூதி தொடர்பான வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறவுள்ளது. இந்த நிலையில் அமித்ஷாவின் இதுபோன்ற பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்‘’ என்று பாலக்காட்டில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. அரசியல் கழிசடைப் பேர்வழி ஒருவர், எழுத்தில் எழுத முடியாத கொச்சை விமர்சனத்தை உயர்நீதிமன்றம்பற்றிப் பேசி பிறகு (வேறு வழியில்லாமல்) நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுள்ளார்!
நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிப்பது வேறு; உள்நோக்கத்தோடு, அரசியல் வேட்கையுடன் கொச்சைப்படுத்துவது என்பது வேறு.
இரண்டுக்கும் - மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு உண்டு.
நீதிமன்றத்தை துச்சமாக மதிக்கும் அமித்ஷா!
பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மாநிலங்களவை உறுப்பினர், அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்றவர். அவர் அரசியல் சட்டத்தின் உச்சகட்ட அமைப்பான உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளுக்குத் தீர்ப்பு எழுதவே தெரியவில்லை என்று தலைமை நீதிபதி உள்பட, மூத்த நீதிபதிகள் மற்ற நீதிபதிகள் 5 பேர்களைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வையே துச்சமாக்கி, அவர் இஷ்டப்படிப் பேசி அவமதித்துள்ளார்!
சென்னை உயர்நீதிமன்றம் தானே முன்வந்து பா.ஜ.க.வின் பொறுப்பாளர் ஒருவரின் பொறுப்பற்ற கொச்சைப் பேச்சுக்காக நீதிமன்றம் சார்பில் நடவடிக்கை எடுத்ததுபோல, உச்சநீதிமன்றம் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
அன்று வழக்குத் தொடர்ந்ததே
ஆர்.எஸ்.எஸ்.தானே!
மிக முக்கியமான மனித உரிமைப் பிரச்சினையில் - அதுவும் அவர் சார்ந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்களே - சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் எல்லா வயது பெண்களையும் கும்பிட அனுமதிக்கவேண்டும் என்று வழக்குத் தொடுத்துவிட்டு, பிறகு தலைகீழ் பல்டி அடித்து, அதை கேரள கம்யூனிஸ்ட் அரசினைக் கவிழ்ப்பதற்கு ஒரு ஆயுதமாக்கிக் கொண்டு அரசியல் கெடுபிடி வித்தை காட்டுகின்றனர்!
மாநில அமைச்சரின் சவால்!
கேரள மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர், அமித்ஷாவுக்கு சவால்விட்டு - முதுகெலும்பு உள்ளவர்கள் நாங்கள் என்று காட்டும் வகையில், ‘‘அமித்ஷா அவர்களே, உங்களுக்குத் தைரியமிருந்தால் எங்கள் கேரள ஆட்சியைக் கலைத்துப் பார்’’ என்று பேசியுள்ளார்! பாராட்டுகிறோம்.
தமிழ்நாட்டு அரசு இப்படி பறிபோகும் பல மாநில உரிமைகளை நினைவூட்டிக் கேட்டுப் பெறக்கூடத் துணிவின்றி இருப்பது மிகவும் வேதனைக்குரியது - மாநில உரிமைகள் நாளும் பறிபோகின்றன.
தமிழக அரசின் பரிதாப நிலை!
6000 கீழமை நீதிபதிகளை மத்திய அரசே தனித்தேர்வு நடத்தி நியமனம் செய்வோம் என்று கூறியதற்கு, இதுவரை எந்த எதிர்ப்பையும் தமிழ்நாடு அரசு தெரிவிக்கவில்லையே!
தமிழ்நாடு பப்ளிக் சர்வீசு கமிசனும், சென்னை உயர்நீதிமன்றமும் கலந்து நமது தமிழ்நாட்டில் கீழமை நீதிபதிகளை நியமிப்பதற்குப் பதில் (அரசியல் சட்ட விதிகளுக்கு முற்றும் புறம்பாக) நடந்துகொள்வதற்கு உடனடியாக மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டாமா?
அதுபோல 2 ஆண்டுகளுக்குமேல் ‘நீட்’ தேர்வுக்கு விதிவிலக்குக் கோரிய இரண்டு மசோதாக்களின் கதி என்னாயிற்று என்றே இதுவுரை தெரியாத வேதனையான நிலை உள்ளது.
அமித்ஷாக்களின் ஆட்டம் இன்னும் 6 மாதங்கள்தான்! மக்கள் பாடம் கற்பிப்பர்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் செல்வி மாயாவதி போன்றவர்களைத் தொடர்ந்து மற்ற தேசிய, மாநிலக் கட்சித் தலைவர்களும் அமித்ஷாவின் இந்த வரம்பு மீறிய ஆணவ நீதிமன்ற அவமதிப்புப் பேச்சினைக் கண்டிக்க முன்வந்தால்தான் ஜனநாயகம் பிழைக்கும்.