வங்கக்கடலில் ஹமூன் என்ற புயல் உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் அதிகளவிலான மழைப்பொழிவை ஏற்படுத்தும் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் நேற்று முதல் தொடங்கி உள்ளது. மேலும் அரபிக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. தேஜ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மிக தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஓமன் - ஏமன் கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்ல கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வங்கக் கடல் பகுதியை பொறுத்த வரையில் மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும். வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. நாளை (23.10.2023) வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து 25 ஆம் தேதி வங்கதேசம் அருகே கரையை கடக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு ஈரான் பரிந்துரை செய்துள்ள ஹமூன் என்ற பெயர் சூட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.