![Allegation of not paying salaries to sanitation workers in Tamil Nadu on due dates](http://image.nakkheeran.in/cdn/farfuture/GygPH9WXVGteFr4jr1hkA6_TBiN9KBUmngmkjy3DWq0/1710482778/sites/default/files/inline-images/2_279.jpg)
தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்கப்படுவதில்லை என தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணைய தலைவர் வேதனை தெரிவித்துள்ளார்.
சேலத்தில் தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். சீருடை, பாதுகாப்பு உபகரணங்களை ஒப்பந்ததாரர்கள் 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும்; இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பணியின் போது தூய்மை பணியாளர்கள் அதிக அளவில் உயிரிழக்கின்றனர்.
ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநாராட்சி நிர்வாகமே ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது போன்று, தமிழக அரசும் நேரடியாக தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். இதனால் அவர்களின் பிரச்சினை 60 சதவீதம் வரை குறையும்.
தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்புக்காக தேசிய ஆணையம் இருப்பதுபோல, மாநில ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். 2022 முதல் நிரந்தர தூய்மைப் பணியாளர் ஓய்வுபெற்றால், அந்த இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கலாம் என்ற உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், தூய்மைப் பணியாளர்கள் வேறு தொழிலுக்குச் செல்ல விருப்பப்பட்டால், அவர்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும்” என்றார்.