Skip to main content

“பதவி உயர்வுக்கான பெயர் பட்டியலில் 31 பேரையும் சேர்க்க வேண்டும்”-நீதிபதி உத்தரவு!

Published on 08/07/2021 | Edited on 08/07/2021
"All 31 names should be included in the list of names for promotion" - Judge orders

 

வைகை அணைக்கட்டு வனவியல் கல்லூரியில் பயிற்சி முடிக்காத வனக்காவலர் 31 பேருக்கு வனவர் பதவி உயர்வுக்கான பெயர் பட்டியலில் சேர்க்கும்படி தமிழ்நாடு வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வனத்துறையில் வன காவலராக ( பாரஸ்ட் வாட்சர்) பணியாற்றி வரும் அன்பழகன், பால்ராஜ், மனோகரன் உள்ளிட்ட 31 பேருக்கு 2011-12ல் வனவர் ( பாரஸ்டர்) பதவி உயர்வு வழங்குவதற்கான பெயர் பட்டியலில் இடம்பெறாததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கில், பதிலளித்த, வனத்துறையின் முதன்மை தலைமை வன பாதுகாப்பு அதிகாரி, 31 வன காவலர்களும் வைகை அணைக்கட்டில் உள்ள வனவியல் கல்லூரியில் பயிற்சி முடிக்கவில்லை. அதனால், பணி விதிகள் படி, இந்த 31 பேரும் பதவி உயர்வுக்கு தகுதியற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்களுக்கு பயிற்சி கொடுக்காதது வனத்துறையின் நிர்வாக அலட்சியப்போக்கே காரணம் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஆர். சுப்பையா, வனக் காவலர் 31 பேரையும், பதவி உயர்வு வழங்குவதற்கான பெயர் பட்டியலில் சேர்க்கும்படி 2016- ல் வனத்துறைக்கு உத்தரவிட்டார். 

 

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு வனத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.  இந்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா,  கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கொண்ட பெஞ்சானது, அரசின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வனவர் பதவி உயர்வுக்கான பெயர் பட்டியலில் மனுதாரர்கள் 31 பேரையும் சேர்க்கும்படி வனத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்