மே1 தொழிலாளர்கள் தினமான நேற்று நடிகர் அஜித்தின் 48வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக் கூடிய ரசிகர்களும் தங்கள் தலயின் 48வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்கள். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நடிகர் அஜித் ரசிகர்களோ திடீரென மன்றத்தை கலைத்து விட்டு திமுகவில் ஐக்கியமாகினார்கள்.
நடிகர் அஜித்திற்கு தமிழகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர், ரசிகர் மன்றங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தன. கடந்த 2011ஆம் ஆண்டு, திடீரென்று ஒரு நாள் தன் ரசிகர் மன்றங்களைக் கலைத்து அறிவிப்பொன்றை வெளியிட்டார் அஜித். அது ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சிலர் தங்கள் சுயநலத்துக்காக, அரசியல் நோக்கத்துக்காக மன்றத்தைப் பயன்படுத்துவதாகக் காரணமும் சொல்லப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து மன்றங்களாக இயங்கி, திரைப்பட ரிலீஸின் போதும் பிறந்தநாளின் போதும் பொது மக்களுக்கு உதவிகளும் மறுபக்கம் பேனர், பாலாபிஷேகம் போன்ற வேலைகளையும் செய்து வந்தனர் அஜித் ரசிகர்கள். கடைசியாக வெளிவந்த 'விவேகம்' படம் வரையிலுமே ரசிகர் மன்றங்கள் தங்கள் இருப்பைக் காட்டியே வந்தன.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு, அய்யம்பாளையம். பட்டிவீரன்பட்டி உள்பட சில பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் திடீரென மன்றத்தைக் கலைத்து விட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மகனுமான பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் முன்னிலையில் திமுக வில் சேர்ந்தனர். இப்படி மன்றத்தைக் கலைத்து விட்டு தளபதி பக்கம் வந்த தல ரசிகர்களை ஐ.பி.செந்தில்குமார் வரவேற்று சால்வை அணிவித்தார். அப்பொழுது திமுகவில் இணைந்த தல ரசிகர்களும் மாவட்ட செயலாளர் ஐ.பி.எஸ் க்கு வெள்ளி வாள் பரிசு வழங்கினார்கள்.
இது குறித்து நேற்று திமுகவில் இணைந்த வத்தலக்குண்டு ஒன்றிய ரசிகர் மன்ற செயலாளர் மகாமுனியிடம் கேட்டபோது, "தற்பொழுது ரஜினி, கமல் எல்லாம் அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார்கள். அதில் உள்ள ரசிகர்கள் எல்லாம் எங்க கட்சியில் சேர்ந்து விடுங்கள். உங்கள் தல கட்சி ஆரம்பிக்கமாட்டார் என தொடந்து டார்ச்சர் செய்து வந்தனர். இருந்தாலும் தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி மக்கள் மத்தியில் திமுக செயல் தலைவரான ஸ்டாலின் நல்ல பெயர் எடுத்து வருகிறார். அது போல் திமுகவில் உள்ள ஐ.பி.செந்தில்குமாரும் இளைஞர்களை கட்சிக்கு வரவழைத்து அவர்களை அரவணைத்து வருகிறார். அதனால்தான் ஐ.பி.எஸ். முன்னிலையில் திமுகவில் சேர்ந்தோம். இதுபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளான பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைக்கானல் பகுதிகளில் உள்ள ரசிகர்களும் கூடிய விரைவில் திமுகவில் இணைய இருக்கிறார்கள்" என்றும கூறினார்.
ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் ரஜினி மன்ற செயலாளராக இருந்த தம்புராஜின் பதவியை திடீரென தலைமை பறித்ததால் அவருடைய ஆதரவாளர்கள், பெரும்பாலான பொருப்பாளர்கள் ரஜினி மக்கள் மன்றத்தை விட்டு வெளியேறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.