Skip to main content

சேலத்தில் உள்ளாட்சி தேர்தலில் 13 ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிக்குழுவை கைப்பற்றியது அதிமுக!

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சேலம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் தலைவர் பதவிகளை அதிமுக கூட்டணி வசப்படுத்தி உள்ளது. மாவட்ட ஊராட்சிக்குழுவையும் ஆளுங்கட்சி கூட்டணியே கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜன. 2ம் தேதி எண்ணப்பட்டன. எனினும், ஜன. 3ம் தேதி பிற்பகலில்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றி பெற்றவர்களின் ஒட்டுமொத்த இறுதி நிலவரமும் வெளியிடப்பட்டது.

 

admk

 

ஊராட்சி ஒன்றியங்களில் வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆகிய இரு பதவிகளுக்கும் கட்சிகளின் சின்னங்களின் அடிப்படையில் தேர்தல் நடந்தது. அதனால், இவ்விரு பதவிகளையும் கைப்பற்றுவதில் ஆளும் அதிமுக, திமுக கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தம் 288 உறுப்பினர் பதவிகள் உள்ளன. மாவட்ட ஊராட்சிகளில் 29 பதவிகள் இருக்கின்றன.

இவற்றில், பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், நங்கவள்ளி, தாரமங்கலம், மேச்சேரி, ஓமலூர், சங்ககிரி, இடைப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி ஆகிய 13 ஒன்றியங்களில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று, தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளது.

இதில், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 10 உறுப்பினர் பதவிகளில் அதிமுக 8, அதன் கூட்டணி கட்சியான பாமக 2 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. இந்த ஒன்றியத்தில் திமுகவுக்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை.

வாழப்பாடி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 13 உறுப்பினர் பதவியிடங்களில் அதிமுக 8, பாமக 2, தேமுதிக 1 என அதிமுக கூட்டணிக்கு 11 இடங்கள் கிடைத்திருக்கிறது. இந்த ஒன்றியத்தில் திமுகவுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது. மற்றொன்றில் சுயேச்சை வெற்றி பெற்றிருக்கிறார். இடைப்பாடி ஒன்றியத்திலும் மொத்தமுள்ள 13 உறுப்பினர் பதவிகளில் திமுக ஒரே ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றி இருக்கிறது. மற்ற 12 இடங்களையும் அதிமுக கூட்டணி வசப்படுத்தி உள்ளது.

திமுக, அதிமுக கட்சிகளிடையே நேரடி மோதல் நிலவிய ஒன்றியங்கள் வரிசையில் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக, அதிமுக கட்சிகள் தலா 6 இடங்களிலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஓர் இடத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த ஒன்றியத்தில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 19. ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திலும் அதிமுகவைக் (4 இடங்கள்) காட்டிலும் திமுக சார்பில் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

கெங்கவல்லி ஒன்றியத்தில் அதிமுகவுக்கு சரிக்கு சரியாக திமுக மல்லுக்கட்டி இருக்கிறது. இங்கு மொத்தமுள்ள 11 உறுப்பினர்களில் இரு கட்சிகளும் தலா 5 இடங்களிலும், ஒரே ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இவை தவிர, சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுவை இந்த முறை அதிமுக கூட்டணி வசப்படுத்தியிருக்கிறது. மொத்தமுள்ள 29 உறுப்பினர் பதவியிடங்களில் அதிமுக தனித்தே 18 இடங்களில் வென்று மெஜாரிட்டி பெற்றுள்ளது. இதன் கூட்டணியில் உள்ள பாமக 4, தேமுதிக 1 என அதிமுக கூட்டணிக்கு மொத்தமாக 23 இடங்களையும், திமுக 6 இடங்களையும் கைப்பற்றி உள்ளன.

கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு திமுக வசம் இருந்தது. எட்டு ஆண்டுக்குப் பிறகு நடந்த இந்த தேர்தலில், சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுவை அதிமுக வசப்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்