கோவை செல்ல சென்னை விமானநிலையம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வழியனுப்ப அதிமுக தொண்டர்கள் குவிந்த நிலையில், விமானநிலைய சோதனையின்போது அதிமுக நிர்வாகி ஒருவர் துப்பாக்கியுடன் வந்திருப்பது தெரியவர அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இன்று கோவை சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை விமானநிலையத்தில் வழியனுப்ப அதிக அதிமுக தொண்டர்கள் கூடினர். நிர்வாகிகளை உள்ளே அனுமதிக்க வழக்கம்போல் அனைவரையும் சோதனை செய்தனர். அப்போது காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் சோதனையின் பொழுது துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. துப்பாக்கி வைத்திருப்பதை அவரே முன்வந்து ஒப்புக்கொண்டார். மேலும் தான் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
துப்பாக்கிவைத்திருக்க உரிமம் இருந்தாலும் முதல்வரை வழியனுப்ப வருகையில் துப்பாக்கி கொண்டுவந்ததால் அவர் மீனம்பாக்கம் எஸ்3 காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு உரிய சான்றுகளை காண்பித்த பின்னர் அவர் எச்சரித்து விடுவிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக நிர்வாகி துப்பாக்கியுடன் வழியனுப்ப வந்த சம்பவம் விமானநிலையத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.