
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்தவர் பச்சைக்குமார். நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மணிமாலை விற்று வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஊத்தங்கரையில் இருந்து செய்யாறு நோக்கி நேற்று (02-05-25) காலை சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த பால்வண்டி ஒன்று, பச்சைக்குமார் வாகனத்தின் மீது மோதியது.
இதில் பச்சைக்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலை, கால், கை ஆகியவற்றில் முறிவு ஏற்பட்டது. காயமடைந்த பச்சைகுமார், போளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், பால்வண்டி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையில், தனக்கு நேர்ந்த விபத்து குறித்து பச்சைக்குமார் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு பதற்றமடைந்த பச்சைக்குமாரின் பெற்றோர், பால்வண்டியின் உரிமையாளரும் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான கணேஷ் என்பவரிடம் நடந்த சம்பவம் குறித்து நியாயம் கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த கணேஷ், பச்சைக்குமாரின் மனைவி மற்றும் அவருடைய பெற்றோரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், அந்த மூன்று பேரும் நிலைதடுமாறிப் போகின்றனர். மேலும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பச்சைக்குமாரின் குடும்பத்தினர், போளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அதிமுக நிர்வாகி கணேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் குறித்து நியாயம் கேட்கப் போன்ற குடும்பத்தினர் அதிமுக நிர்வாகி கொடூரமாகத் தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.