சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (14/06/2022) காலை 11.00 மணிக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அ.தி.மு.க.வுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தினர். ஒற்றைத் தலைமை யார் என்பதைக் கட்சிதான் முடிவு செய்யும். அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் எதிர்பார்ப்பது ஒற்றைத் தலைமையைத்தான். ஒற்றைத் தலைமைக்கான விடையைக் கட்சி சொல்லும், தற்போது நடந்தது கருத்துப் பரிமாற்றம் தான். கட்சிக்குத் தொடர்பில்லாத சசிகலா குறித்து விவாதித்து ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். சசிகலா குறித்து எதற்கு விவாதிக்க வேண்டும்? கட்சிக்கு கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லாதவர் சசிகலா. அ.தி.மு.க.வுக்கு அழிவு என்பது கிடையாது" எனத் தெரிவித்தார்.
இதனிடையே, அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து வந்த நிலையில், வெளியே தொண்டர்கள் ஒற்றைத் தலைமை குறித்து முழக்கமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.