![gh](http://image.nakkheeran.in/cdn/farfuture/Xa9ereTWGq1ZuchY7aRz8LgPVkgP--nAwbsH8vkFqgg/1623680489/sites/default/files/inline-images/45_31.jpg)
பிரதமரின் அனைவருக்கும் வீடு மற்றும் தூய்மை இந்தியா திட்டங்களில் நிதி ஒதுக்கப்பட்டும், கட்டி முடிக்கப்படாத வீடு மற்றும் கழிவறைகளை கட்டித்தரக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 75 வயதான ஆர்.அமிர்தவள்ளி தாக்கல் செய்த மனுவில், மன்னார்குடி கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட தலையாமங்கலம் பஞ்சாயத்தில், மத்திய அரசின் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2017- 2019ஆம் ஆண்டுகளில் 225 வீடுகளும், 493 கழிவறைகளும் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், தற்போது வரை சில வீடுகள் மற்றும் கழிவறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ள நிலையில், தேர்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கான 144 வீடுகளும், 433 கழிவறைகளும் கட்டிதரப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். இதில் மிகப்பெரிய கையாடல் நடைபெற்றுள்ளதாக தலையாமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை 20ல் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் 2017 - 2019 ஆண்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாதால், தலையாமங்கலம் ஊராட்சியை நிர்வகிக்க செயலாளராக ராஜ்மோகன் நியமிக்கபட்டதாகவும், ஆனால் அவர் எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் தனது சகோதரர் பாஸ்கரனுக்கு வீடு மற்றும் கழிவறைகள் கட்டும் திட்டத்தை ஒப்படைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். கட்டுமானங்களை முடித்து பயனாளிகளிடம் தராமலேயே, 5 கோடிக்கு கணக்கு மட்டும் காட்டி மோசடி செய்துள்ளதாகவும், வட்டார வளர்ச்சி அலுவலரான கலைச்செல்வன் என்பவருடன் கூட்டு சேர்ந்து அரசு ஒதுக்கிய நிதியில் கையடல் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். எனவே மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டபடாமல் உள்ள 144 வீடுகள் மற்றும் 433 கழிவறைகளை கட்டிதர நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய மாநில அரசுகளும், திருவாரூர் மாவட்ட ஆட்சியரும் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.