Skip to main content

ஈரோட்டில் வேளாண் மசோதாவை எதிர்த்துப் போராட்டம்...

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

agriculture bill erode farmers

 

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் இதற்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசைக் கண்டித்தும் விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஈரோட்டில் பேருந்து நிலையம் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சி.எம்.துளசிமணி தலைமையில் மறியல் நடந்தது. அதேபோல் கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விவசாய கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வேளாண் மசோதாக்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் விவசாய சங்கங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். 

 

போராட்டத்தின்போது, "மூன்று வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெற வேண்டும். மத்திய அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும். மசோதாக்களை நிறைவேற்றி விவசாயிகளுக்கு பச்சைத் துரோகமிழைத்த பா.ஜ.க அரசையும் துணை போன அ.தி.மு.க அரசையும் கண்டிப்பதாக கோஷம் எழுப்பப்பட்டது. மேலும், பா.ஜ.க அரசு விவசாயிகளையும் விவசாயத்தையும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடம் ஒப்படைக்கும் வகையில் வேளாண் மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளதாக கோஷமிட்டனர். 

 

இலவச மின்சாரத்தைப் பறிக்கும் மின்சார திருத்தச் சட்ட மசோதா கொண்டுவர முயற்சிப்பது உள்ளிட்ட மசோதாக்களை எதிர்த்து பா.ஜ.க. கூட்டனியில் உள்ள மத்திய அமைச்சர் ஒருவரே ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அ.தி.மு.க அரசோ மசோதா நிறைவேற கைதூக்கி ஆதரவளித்துள்ளது. இந்தப் பச்சை துரோகத்தைக் கண்டித்து பஞ்சாப், ஹரியானா உட்பட நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கொந்தளித்து கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் விவசாயிகளைப் பாதிக்கும் இந்த மூன்று மசோதக்களையும் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டோர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்