தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தலைமை நீதிபதியை வரவேற்று பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியபோது அவர் அளித்த தீர்ப்புகளில் சமூக அக்கறையோடு, குடிமக்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் பல தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். அரசு, மதசார்பற்றதாக இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். காளி பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகளில் பட்டாசு வெடிப்பதால் பலனில்லை. மாற்றாக, மெழுகு தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டுள்ளார்” எனச் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வரவேற்புரை ஆற்றியபோது, “கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக காளி பூஜையைத் தடை செய்தார். கரோனா விதிகளால் கீழமை நீதிமன்றங்களைச் சார்ந்த வழக்கறிஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் கருத்தில்கொண்டு, ஜனவரி 18 முதல் அவற்றைத் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்தது போல, உயர் நீதிமன்றத்திலும் முழுவதுமாக நேரடி விசாரணை தொடங்க வேண்டும். வழக்கறிஞர்களின் அறைகளைத் திறக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன், தனது வரவேற்புரையில், “காணொளி மூலமான விசாரணை என்பது நேரடி விசாரணைக்கு ஈடாகாது. எனவே, நீதிமன்றங்களையும், வழக்கறிஞர் அறைகளையும் திறக்க வேண்டும்” என அதே கோரிக்கையை முன்வைத்தார்.
மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் பேசுகையில், “விசாரணைகள் முடிந்த சில நாட்களிலேயே தீர்ப்புகளை வழங்குபவர். ஏற்கனவே இரண்டு நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பும் வாய்ப்பை இழந்த சென்னை உயர் நீதிமன்றம், புதிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை அனுப்புவதன் மூலமாக மீண்டும் அந்தப் பெருமையை அடையும்” என நம்பிக்கை தெரிவித்தார். பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் லூயிசால் ரமேஷ், லா அசோசியேசன் தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் வரவேற்று பேசினர்.
இதனைத் தொடர்ந்து ஏற்புரை ஆற்றிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி “வணக்கம்..” எனக் கூறி தனது உரையைத் தொடங்கினார். “திருவள்ளுவர் மண்ணுக்கு வந்துள்ளது பெருமை அளிக்கிறது. நாட்டிலேயே ஒரு மொழியின் பெயரைக் கொண்டுள்ள மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். தொன்மையான மொழியாம் தமிழை, இன்னும் கோடிக்கணக்கான பேர் செருக்கோடும் பெருமையோடும் பேசி வருகின்றனர். பாரம்பரியமிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இருந்து இன்னொரு பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்துள்ளது எனக்குப் பெருமை அளிப்பதாக உள்ளது. வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பின்றி நீதி பரிபாலனம் சாத்தியமில்லை.
இசை, பாரம்பரியம், நடனம், இலக்கியம், கலாச்சாரம் என அனைத்திலும் தனித்தன்மையோடு சிறந்து விளங்கும் தமிழகம் என்னுடைய மாநிலமாகும். இந்த மாநிலத்தில் நான் ஒரு சேவகன்” எனத் தெரிவித்த அவர், “நன்றி.. ஜெய் ஹிந்த்!” எனக் கூறி நிறைவு செய்தார்.