கடந்த 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார் கே.சி.வீரமணி. அப்போது மாவட்டச் செயலாளராக இருந்தாலும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. வேலூர் எம்.எல்.ஏ.வாக இருந்த மருத்துவர் விஜய்- க்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அமைச்சராக இருந்த விஜய் ஊழல் விவகாரம் ஒன்றில் சிக்கியதால் சசிகலா சிபாரிசில், தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் நட்பிலிருந்த கே.சி.வீரமணியை அமைச்சராக்கினார் முதல்வராகியிருந்த ஜெயலலிதா.
ஜெ மறைவுக்குப் பின்னும், சசிகலா சிறைக்குச் சென்றபின் சில அமைச்சர்கள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியுடன் முரண்டுப்பிடித்து அதை வெளிப்படுத்தினர். முதலமைச்சருடன் முரண்டு பிடித்தாலும் அதைப் பொதுமக்கள் மத்தியில் வெளிப்படுத்தாமல் காரியங்களைச் சாதிக்கத் துவங்கினார்.
2012 முதல் 2016 காலகட்டத்தில் கல்லூரி, திருமண மண்டபம், தொழிற்சாலை, கர்நாடகாவுக்குப் பாலாற்று மணல் கடத்தல், ரியல் எஸ்டேட், நிலங்களை வாங்கிப்போடுதல், ஆந்திராவில் பால் பண்ணை, மாம்பழ கூழ் தொழிற்சாலை தொடங்கினார்.
2016- 2021 காலகட்டத்தில் ஹோட்டல் தொழிலில் இறங்கினார். இதற்கு வழிகாட்டியது முக்கிய சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கும் தொழிலதிபர் சேகர் ரெட்டி எனக் கூறப்படுகிறது. ஏலகிரியில் பிரம்மாண்டமான நட்சத்திர ஹோட்டல் ஒன்றை வாங்கினார், மற்றொன்றைக் கட்டினார். அதேபோல் திருப்பத்தூரில் ஒரு நட்சத்திர ஹோட்டல், திருமண மண்டபம் எனக்கட்டினார். அடுத்ததாக ஓசூரில் நட்சத்திர ஹோட்டல் கட்டினார். பெங்களூரிலும் ஒரு ஹோட்டல் என வரிசையாக கார்ப்பரேட் செயின் லிங்க் ஹோட்டல்களை உருவாக்கத் துவங்கினார்.
உறவுக்காரர்கள், கட்சிக்காரர்கள், குடும்பத்தினர் பெயர்களில் சொத்துக்களை வாங்கி குவித்தார். இப்போது அதில்தான் ஆதாரங்களோடு சிக்கியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 17- ஆம் தேதி அறப்போர் இயக்கத்தின் ஜெய்ராம் செய்தியாளர்களைச் சந்தித்து, "முன்னாள் அமைச்சர் வீரமணி மீது ஊழல் புகார்களை ஆதாரங்களோடு தெரிவித்துள்ளோம். 62 கோடி ரூபாய்க்கு ஊழல் மூலம் சொத்து சேர்த்துள்ளார். உறவினர்கள் பெயரில் சொத்துக்களை வாங்கி அதனை அடுத்த மாதமே தனக்கு அவர்கள் தானம் செட்டில்மென்ட் செய்ததாக ஆவணங்களை உருவாக்கியுள்ளார். 62 கோடி ரூபாய் வருவாய் வந்ததுக்கான ஆதாரமே கிடையாது" என வெளிப்படுத்தினார்.
அந்த புகாரின் அடிப்படையில் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விஜய் முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்து திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, சென்னை, பெங்களூர், ஏலகிரி என 35 இடங்களில் 150- க்கும் அதிகமான அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.