சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில், பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. அதை நன்கு பராமரித்து வருகிறார்கள். அதேபோல் பல்வேறு கோயில்களுக்காக அதிகம் பணம் கொடுக்கிறீர்கள், வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையைப் பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்கு கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று நடிகை ஜோதிகா கூறினார். ஜோதிகாவின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும், சில தரப்பிலிருந்து எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் ஜோதிகாவின் கருத்து குறித்து அவரது கணவரும், நடிகருமான சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்றும் அன்பை விதைப்போம்" என்றும் குறிப்பிட்டு பேசினார்.
இந்த நிலையில் நடிகை ஜோதிகா குறிப்பிட்டு பேசிய அந்த தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஊழியரைப் பாம்பு கடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்பு பாம்பு கடித்த ஊழியரைத் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டுசென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகச் சொல்கின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 10- க்கும் மேற்பட்ட பாம்புகளை வனத்துறையினர் பிடித்துச் சென்றதால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.