ஆவின் பால் டேங்கர் லாரிகளுக்கான வாடகையை 40 சதவீதம் உயர்த்தி வழங்காவிட்டால் வரும் 15ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி அழகரசன் கூறியது:
தமிழகம் முழுவதும் 16 ஆவின் கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளன. ஆவினில் தற்போது 50 பால் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் உள்ளோம். மொத்தம் 240 டேங்கர் லாரிகள் ஓடுகின்றன. 2016&2018ம் ஆண்டுக்கான ஒப்பந்தம் முடிந்து, ஆறு மாதத்திற்கு மேல் வண்டிகளை இயக்கியுள்ளோம். எங்களுக்கு டீசல், ஓட்டுநர் ஊதியம், டயர், வரி, காப்பீடு உள்ளிட்டவை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒப்பந்தம் முடிந்துள்ளதால் வண்டிகளை தொடர்ந்து இயக்க முடியவில்லை. வாடகை உயர்வு சம்பந்தமாக வரும் 15ம் தேதிக்குள் முடிவு தெரிய வேண்டும். அதற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறோம்.
இப்போது, ஒரு கிலோமீட்டருக்கு 21 ரூபாயிலிருந்து 26 ரூபாய் வரை வாடகை வழங்கப்படுகிறது. அதை 40 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். அதாவது, 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்தி வழங்க வேண்டும். டேங்கர் லாரி வாடகையை உயர்த்தும்படி கடந்த இரண்டு மாதங்களாக போராடி வருகிறோம். ஆவின் அதிகாரிகளிடம் மூன்று முறை கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளோம். பதில் ஏதும் இல்லை. இதையடுத்து பால்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேச முடிவு செய்திருக்கிறோம்.
தமிழகத்தில் முழுவதும் தினமும் சென்னைக்கு 40 லட்சம் லிட்டர் பால், டேங்கர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. வேலைநிறுத்தம் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் இரண்டு மாதங்களாக போராடி வருகிறோம். எனவே, பால் டேங்கர் லாரிகளுக்கு வாடகையை உயர்த்துவது குறித்து ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் 15ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அழகரசன் கூறினார்.