மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர், பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு தாக்கல் செய்யப்பட்டது என மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.
இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது முதல் நாட்டின் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சியை மறைப்பதற்காகவும், மத்திய பாஜக அரசால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்தையும் மூடி மறைப்பதற்கு வருங்காலங்களில் நிதிநிலை சீராகவும், மற்ற நாடுகளை ஒப்பீடு செய்தால் சிறப்பாகவும் இருக்கக்கூடும் என மத்திய அமைச்சர் அடிக்கடி குறிப்பிடுகிறார். எதிர்காலத்தை மட்டும் குறிப்பிட்டுள்ள அமைச்சர், தற்போது மக்களின் வேலைவாய்ப்பு அதனால் பறிபோன வாழ்வாதரம் போன்றவற்றை மேம்படுத்த எவ்வித உருப்படியான நடவடிக்கையும், கொள்கையும் இந்த நிதிநிலை அறிக்கையில் கூறிப்பிடப்படவில்லை.
அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் என்றும் மத்திய நிதிநிலையில் அறிக்கையில் கூறியுள்ள நிலையில் பல மாநிலங்களில் உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் குழந்தைகள் உட்பட பல உயிர்கள் செத்து மடிந்து வருகின்றன.
விலைவாசி கட்டுக்குள் உள்ளதாகவும், அதனை மத்திய அரசு கட்டுப்படுத்தாவிட்டால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள் என்றும் உண்மைக்கு புறப்பான தகவல்களை நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார். உண்மையில் பெட்ரோல் டீசல் தொடர் விலை உயர்வாலும், அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவு உயர்ந்து, பொதுமக்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலைஉயர்வை கட்டுப்படுத்த அதனை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர அனைத்து தரப்பு மக்கள் கோரிக்கை வைத்தும் அதுதொடர்பாக எவ்வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. வருமான வரி விகிதத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் மக்களுக்கு பெரிதும் பயனளிக்கப் போவதில்லை.
மக்களின் கனவுகளை நனவாக்கும் திட்டத்துடன் அரசு செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் உண்மையில் இந்த பாஜக அரசு மக்களின் தூக்கத்தை கெடுத்துள்ள அரசாக செயல்பட்டு வருகிறது என்பதை உணர வேண்டும்.
விவசாயிகளுக்கான நிதி வழங்கும் திட்டம், பிஃஎப் சந்தாதாரர் உயிரிழந்தால் வழங்கப்படும் நிதி ரூ.6 லட்சமாக உயர்வு மற்றும், பென்ஷன் திட்டத்திற்கான, நிதி ஆதாரத்தை அரசு எப்படி திரட்டப்போகிறது? என்ற தெளிவான அறிவிப்புகள் ஏதும் இல்லை.
நிதிப்பற்றாக்குறை என்பது 6 சதவீதமாக இருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அறிவித்தார். ஆனால், நிதி ஆதாரம் இல்லாத இந்த புதிய கவர்ச்சி அறிவிப்புகளால் மீண்டும் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
எனவே, இதுவெறும் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு தயாரிக்கப்பட்ட கவர்ச்சி நிதிநிலை அறிக்கையாக உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக மோடி அரசின் கவர்ச்சி அறிவிப்புகளினால் வெறுப்படைந்துள்ள மக்கள், இந்த வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளவையும் வெற்று அறிவிப்புகள் என்று நன்கு உணர்ந்து தகுந்த பாடத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தலில்; பாஜகவிற்கு கற்பிப்பார்கள் என்ப|து நிச்சயம் எனக்கூறியுள்ளார்.