Skip to main content

சேலம் கோயிலில் உண்டியலை உடைத்து முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை!

Published on 16/09/2018 | Edited on 16/09/2018

சேலத்தில் பிரசித்தி பெற்ற குகை மாரியம்மன் கோயிலில், முகமூடி கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் குகை பகுதியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவையொட்டி இந்த கோயில் சார்பில் நடைபெறும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி, மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த மாதம் 8ம் தேதி ஆடி பண்டிகை தொடங்கி ஒரு வாரம் கொண்டாடப்பட்டது. 

 

robber

 

இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சென்றனர். இதனால் பக்தர்கள் வேண்டிக்கொண்டு, கோயில் உண்டியலில் தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட காணிக்கைகளை செலுத்தினர். கோயில் உண்டியலும் நிறைந்து இருந்தது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலின் உண்டியல் வரும் 24ம் தேதி திறந்து, காணிக்கைகளை எண்ணும் பணிக்கு திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவுக்கு மேல் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் முன்பக்கம் உள்ள பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த உண்டியலை உடைத்த மர்ம நபர்கள், அதிலிருந்த பணம், நகை உள்ளிட்ட பொருள்களை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பிச்சென்றிருப்பது தெரிய வந்தது.

 

இன்று காலையில் கோயிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் உடைந்து கிடப்பது குறித்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பால்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். தடய அறிவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த விரல் ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. கோயிலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவு ஆகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த மூன்று மர்ம நபர்கள் சுவர் ஏறிகுதித்து கோயிலுக்குள் புகுந்து இருப்பதும், உண்டியல் பூட்டை உடைத்து கொள்ளை அடித்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இந்தக் காட்சிகள் நள்ளிரவு 2 மணியளவில் பதிவாகி இருந்தன.

 

வரும் 24ம் தேதி கோயில் உண்டியல் திறக்கப்பட உள்ளது. இதையறிந்துதான் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்திருக்க வேண்டும். அம்மனுக்கு செலுத்திய காணிக்கைகளை மீட்க வேண்டும் என்று பக்தர்கள் கூறினர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலுக்கும், கோயில் நிர்வாகத்தினருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? இதில் ஈடுபட்டது பழைய கொள்ளையர்களா? புதிய ஆள்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குகை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஓமலூரில் கலப்பட மதுபானம் விற்பனை; 5 பேர் கைது

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sale of adulterated liquor at Omalur; 5 people arrested

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 62 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராய மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கலப்படம் மதுபானம் விற்கப்பட்டது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாதாரண உடையில் காவல்துறையினர் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது கலப்பட மதுபானம் விற்று வந்த 5 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கலப்பட மது பாட்டில்கள், செல்போன், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

கத்தியைக் காட்டி வழிப்பறி; 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
10 years in jail for 5 people who stole 12 lakh rupees from Tasmac supervisor

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரான திருச்செல்வம் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு கடையின் விற்பனை பணம் ரூ.12 லட்சத்தை எடுத்து கொண்டு இரவில் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கும்மிடிப்பூண்டி வழியே ராகவரெட்டிமேடு பகுதிக்கு செல்லும் போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தை இடித்து தள்ளி கத்தியை காட்டி மிரட்டி 12 லட்சம் பணத்தை வழிப்பறி செய்து தப்பிச் சென்றது. 

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து  சோழவரம் அருண், புழல் பக்ருதீன், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த மதன்குமார், அருண், ஜெய்சீலன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 6 லட்ச ரூபாய் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் வழக்கு விசாரணை பொன்னேரி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு வந்ததும் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி பிரேமாவதி குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.