கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி அனல்மின் நிலையம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய தென்னிந்திய மாநிலங்களின் மின் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
இந்நிறுவனத்தில் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பஞ்சப்படி உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் தொழிற்சங்கங்களுடன் என்.எல்.சி நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாததால் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 11-ஆம் தேதி என்எல்சி நிறுவன தலைமை அலுவலகத்தில் வேலை நிறுத்த அறிவிக்கை வழங்கினர். வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த 19-ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள உதவி தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மற்றும் தொடர்ந்து ஒன்பது கட்டங்களாக என்.எல்.சி அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு என்.எல்.சி தலைமை அலுவலகத்தில் இறுதிகட்ட பேச்சுவார்த்தை என்.எல்.சி நிர்வாக இயக்குனர் ராகேஷ்குமார் மற்றும் மனிதவள இயக்குனர் விக்ரமன் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், நடப்பாண்டிற்கு 750 தொழிலாளர்களுக்கும், அடுத்தடுத்த ஆண்டுகளில் 60% தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது எனவும், ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகளையும் செய்து தருவதாக உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மூன்றாவது ஊதிய ஒப்பந்தம் சிறப்பான முறையில் ஏற்பட்டதையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகள், என்.எல்.சி நிர்வாக இயக்குனர் ராகேஷ்குமாருடன் செல்பி படங்கள் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார். மேலும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேறியதால் அறிவிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகேஷ்குமார்,
"ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சிறப்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தை முடிவால் அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் அமையும் " என்றார்.
அதேசமயம் இந்த உடன்படிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமையவில்லை" என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.