சேலத்தில், போலியாக வீட்டு உபயோக பொருள் விற்பனை நிறுவனம் நடத்தி வந்த தந்தையும், மகனும் 60 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 6 லட்சம் ரூபாய் கார் வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு, 100 கோடி ரூபாய் வரை சுருட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.
சேலம் செவ்வாய்பேட்டை, அழகாபுரம் ஆகிய பகுதிகளில் சில ஆண்டுக்கு முன்பு, ஒரு தனியார் வீட்டு உபயோக பொருள் விற்பனை நிறுவனம் இயங்கி வந்தது. இந்நிறுவனத்தில் 60 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், 6 லட்சம் ரூபாய் கார், வெறும் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் கிடைக்கும் என்று விளம்பரம் செய்தது. மேலும், சந்தை விலையைக் காட்டிலும் மிகக் குறைவான விலையில் தங்கம், வெள்ளி விற்பனை செய்யப்படும் என்றும் டிவி, பத்திரிகைகளில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டனர்.
இந்த அறிவிப்புகளை நம்பி சேலம், நாமக்கல் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அந்நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தனர். பலர் வட்டிக்குக் கடன் பெற்றும் முதலீடு செய்திருந்தனர்.
இது போதாதென்று, 60 ஆயிரம் ரூபாய் செலுத்தி 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான காருக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்தவர்களிடம் கார் டெலிவரி கட்டணம், வரி என்ற பெயர்களில் அடிக்கடி அந்நிறுவன ஊழியர்கள் பணம் பறித்துள்ளனர். ஆனால் கடைசி வரை காரையோ, மோட்டார் சைக்கிளையோ முதலீட்டாளர்களின் கண்ணில் கூட காட்டவில்லை. இதுபோல் குறைந்த விலைக்கு தங்கம், வெள்ளி, மோட்டார் சைக்கிள் ஆகியவையும் யாருக்கும் வழங்காமல் போக்குக் காட்டி வந்துள்ளனர்.
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் சொல்லாமல் கொள்ளாமல் நிறுவனத்தை மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
இதனால் ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்கள், இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். முதல்கட்ட விசாரணையில், இந்நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டிக் கொண்டு மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான நாகராஜன், அவருடைய மகன் வெங்கடேசன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகராஜன், வெங்கடேசன் ஆகியோர் நடத்தி வந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. புதிய புகார்களின் அடிப்படையில், மோசடி நபர்கள் இருவரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.