தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக முடிவடைந்தது. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் செய்து பாதுகாக்கும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயலாற்றி வருகிறது.
ஏற்கனவே டிஜிட்டல் முறை வாக்குப்பதிவிற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் அது நம்பகத்தன்மையாக இல்லை எனவும் பலமுறை பலரும் தெரிவித்து வந்தனர். அதேபோல் சில வாக்குச்சாவடிகளில் மக்கள், வாக்களித்த சின்னத்திற்கு அல்லாமல் வேறு சின்னத்திற்கு வாக்குகள் போட்டது போல் ஒளி ஒளிர்ந்ததாகவும் புகார்கள் கூறப்பட்டன.
இவ்வாறு இருக்கையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட திருவாடுதுறையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவில் குழப்படி நடந்ததாக தெரிகிறது. அதன்படி திருவாடுதுறை அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள 175வது வாக்குச்சாவடியில் மொத்தம் உள்ள 827 வாக்குகளில், 578 வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் கணக்கிட்டுப் பார்க்கும்போது 628 வாக்குகள் பதிவானதாக தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.
அதில் பதிவான மொத்த வாக்குகளைவிட 50 வாக்குகள் கூடுதலாக இருந்ததால், நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை அழிக்காததால், இவ்வாறு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள், இந்த வாக்குச்சாவடி மையத்தில் மறு வாக்குப்பதிவு நடத்த வலியுறுத்தி ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.