Skip to main content

மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி.-க்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்குகள்! -உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

Published on 15/06/2020 | Edited on 15/06/2020
50 per cent reservation cases for OBC in medical studies! - High Court hearing tomorrow!

 

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு கல்வியாண்டும் மாநிலங்களில் உள்ள மருத்துவ படிப்புகளில் 15 சதவீத இடங்களையும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்க வேண்டும். இந்நிலையில், 2020-ம் கல்வியாண்டுக்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேற்படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டு விவரங்களை மருத்துவ கலந்தாய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதில், மருத்துவ மேற்படிப்பில் மொத்தமுள்ள 7 ஆயிரத்து 981 இடங்களில், 6,115 இடங்கள் பொதுப்பிரிவினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு 111 இடங்களும், பட்டியலினத்தவர்களுக்கு 1,172 இடங்களும், பட்டியலின மாற்றுத் திறனாளிகளுக்கு 8 இடங்களும், பழங்குடியினத்தவர்களுக்கு 573 இடங்களும், பட்டியலின மாற்றுத் திறனாளிகளுக்கு 2 இடங்களும் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல,  பல் மருத்துவ மேற்படிப்பில் மொத்தமுள்ள 274 இடங்களில், 211 இடங்கள் பொதுப்பிரிவினருக்கும், 42 இடங்கள் பட்டியலினத்தவர்களுக்கும், 21 இடங்கள் பழங்குடியினத்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எனத் தனியாக எந்தவித ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. அதன்படி திமுக, அதிமுக, மதிமுக, திக ஆகிய கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில்,  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் மனுதாரர்கள் (திமுக, பாமக, அதிமுக) தரப்பு வழக்கறிஞர்கள் பலரும் ஆஜராகி, வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையீடு வைத்தனர்.

இந்த முறையீடுகளைக் கேட்ட நீதிபதிகள், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்குகளை நாளை (ஜூன் 15) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

 

சார்ந்த செய்திகள்