
அருப்புக்கோட்டை அருகே காரில் சென்ற 40 வயது மதிக்கத்தக்க பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அருப்புக்கோட்டையை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விருதுநகருக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றுவிட்டு காரில் நண்பருடன் மீண்டும் அருப்புக்கோட்டை கிளம்பியுள்ளார். அப்பொழுது அவர்கள் காரை பின் தொடர்ந்து வந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து நிறுத்தி பெண்ணுடைய நண்பரை தாக்கியதோடு பெண்ணை கடத்தி கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பெண் அணிந்திருந்த 5 சவரன் நகை, செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் ஐந்து பேரும் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். இரண்டு பேரை தீவிரமாகத் தேடி வருவதால் முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 பேரின் பெயர்கள் உள்ளிட்ட தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.