Skip to main content

நடிகை ஜோதிகா சுட்டிக்காட்டிய அரசு மருத்துவமனையில் பிடிபட்ட கண்ணாடி விரியன், நல்ல பாம்பு!! இரண்டே நாளில் 14 பாம்புகள்!!

Published on 30/04/2020 | Edited on 01/05/2020

 

14 poisonous snakes caught in government hospital


நடிகை  ஜோதிகா சுட்டிக்காட்டிய குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகளுக்கான தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களில், கண்ணாடி விரியன் போன்ற 14 விஷ பாம்புகள் பிடிபட்டுள்ளது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் தங்கியுள்ள நோயாளிகளும், மருத்துவமனை ஊழியர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.


தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு, பெண்களுக்கான சிகிச்சை பிரிவு, கண் கிசிக்சை பிரிவு உள்ளன. மருத்துவமனை வளாகத்தில் பல இடங்களில் புதர்கள் மண்டி இருந்ததால், விஷ பாம்புகள் வருவதாக ஊழியர்கள், கர்ப்பிணிகள் அடிக்கடி புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகை ஜோதிகா இந்த மருத்துவமனையைப் பற்றி பேசினார். ஜோதிகாவின் பேச்சுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் ஒரு சிலர் எதிர்கருத்துகளை வெளியிட்டனர்.

இந்த நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனை துாய்மைப் பணியாளரான செல்வி ( வயது 45). பணி முடிந்து அதே வளாகத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு செல்லும்போது  பாம்பு கடித்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து  மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

 

14 poisonous snakes caught in government hospital

 

நடிகை ஜோதிகா குறிப்பிட்டு பேசியது இம்மருத்துவமனையைதான் என்பதால், கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உத்தரவைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் தங்கும் விடுதி, துாய்மைப் பணியாளர் ஒய்வு அறை உள்ளிட்ட பகுதிகளில் புதர்களை பொக்கலின் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.
 

http://onelink.to/nknapp

 

அப்போது, பாம்புகள் பிடிப்பதற்காக அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையினரை அதிகாரிகள் அழைத்திருந்தனர்.  அறக்கட்டளையை சேர்ந்த சதீஷ்குமார் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் இரண்டு நாட்களாக மருத்துவமனை வளாதக்தில் பாம்புகளைத் தேடி பிடித்தனர். முதல் நாளில், 5 கண்ணாடி விரியன்,  2 சாரைப் பாம்புகள், 3 சிறு வகை பாம்புகள் என மொத்தம் 10 பாம்புகளைப் பிடித்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளில் சாரை, நல்ல பாம்பு என 4 பாம்புகள் பிடிப்பட்டன. தொடர்ந்து பாம்புகள் பிடிப்படும் நிலையில் அனைவரும் நிம்மதியடைந்துள்ளனர். மேலும் தேடிப் பார்க்க கூறியுள்ளனர்.

இதுகுறித்து பாம்புகளைப் பிடத்த இளைஞர்கள்  கூறும்போது,  மருத்துவ மனைகளில் பிடிபட்ட பாம்புகளில் விஷத்தன்மை இல்லாத சிறுவகைப் பாம்புகளை வயல்களில் விட்டுவிட்டோம். கண்ணாடி விரியன் பாம்புகள் விஷத்தன்மை உடையது என்பதால் காப்புக் காடுகளில் விடுவதற்காக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார். நடிகை ஜோதிகா சொன்னது போல நடப்பதை மக்களும் மருத்துவமனை ஊழியர்களும் கவனித்து வருகின்றனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்