விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெண்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு வழிவகை செய்வதற்காகத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த அரசாணையின்படி தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை முதற்கட்டமாகவும், ஆகஸ் 5 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும், இந்த இரண்டு கட்டங்களில் விடுபட்டவர்களுக்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரையில் சிறப்பு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் அரசால் சரிபார்க்கப்பட்டன. அரசு அலுவலர்களால் நேரடியாக கள ஆய்வு, மேற்கொண்டு தகுதி வாய்ந்த 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிர் அரசால் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியில்லாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. மேலும் விண்ணப்பங்கள் குறித்த குறுஞ்செய்தி பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ - சேவை மையங்கள் மூலமாக மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினத்துடன் (24.10.2023) முடிவுற்றது. தமிழ்நாடு முழுவதுமிருந்து சுமார் 11 லட்சத்து 87 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டு அலுவலர்களான சார் ஆட்சியர் அல்லது துணை ஆட்சியர் அல்லது வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிகளை பூர்த்தி செய்கிற ஒரு மகளிர் கூட, விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட அரசு அலுவலர்களை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.