Skip to main content

களைகட்டிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சிறந்த மாடுபிடி வீரராக இருவர் தேர்வு...

Published on 14/01/2021 | Edited on 14/01/2021

 

avaniyapuram jallikattu summary

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. மாடுபிடி வீரர்கள் போட்டிக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்னர்  போட்டியை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இதையடுத்து மாலை 4 மணிவரை எட்டு சுற்றுகள் நடைபெற்றது. இதில் 523காளைகளும், 420 மாடுபிடி வீரர்களும் களம்கண்டனர்.  போட்டியின் முடிவில் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்ற மாடுபிடி வீரரும் முத்துபட்டி பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்ற மாடுபிடி வீரரும் தலா 26 காளைகளை அடக்கியதாக இருவரும் சிறந்த மாடுபிடி வீரர்களாகத் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு பைக்குகள் பரிசாக வழங்கப்பட்டன. பரிசுதொகையாக ஒரு லட்ச ரூபாய் பகிர்ந்து வழங்கப்பட்டது 

 

சிறந்த காளையாக மதுரையைச் சேர்ந்த ஜி்.ஆர். கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான காளை தேர்வு செய்யப்பட்டு பைக் மற்றும் 1லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 

 

போட்டியில் முடிவில் மாடு பிடி வீரர்கள்: 47 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 11 பேர், பார்வையாளர் இருவர் என 60 பேருக்குக் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதனிடையே போட்டியில் கலந்துகொள்வதற்காக வந்த தத்தனேரி பகுதியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளை ஒன்று கயிறு இறுகியதால் உயிரிழந்தது

 

முன்னதாக போட்டியினை அகில இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேரில் கண்டுமகிழ்ந்து மாடுபிடி வீரர்களுக்குத் தங்கக் காசு உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார். அப்போது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் உடனிருந்தனர். 

 

இந்த போட்டியின் நடுவே 6வது சுற்று நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மாடுபிடி வீரர்களாக வந்த வீரகுல அமரன் இயக்க நிர்வாகிகளான திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த வினோத், அவனியாபுரத்தைச் சேர்ந்த பால்பாண்டி ஆகிய இருவரும் அவனியாபுரம் வாடிவாசல் முன்பாக வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடியைக் காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து காவல்துறையினர் அவர்களை அழைத்து சென்றனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதனிடையே வாடிவாசல் அருகே காளை அவிழ்க்கும் இடத்தில் காளையை வரிசையில். அவிழ்ப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் மதுரை கரடிக்கல் பெருமாள்பட்டியை சேர்ந்த அருண்குமார்(27), தேவேந்திரன் (25). ஆகிய இருவரையும் கத்தியால் குத்தியதில் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்