Skip to main content

சிறையில் இருந்தவருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம்! 

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

100-day work program salary for the person who was in jail!

 

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுக்கா பழைய கருவாச்சி கிராமத்தில் நேற்று (அக். 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் ஊராட்சியில் நடைபெற்ற திட்டப்பணிகள் மற்றும் செலவினங்கள் குறித்த வரவு செலவு கணக்குகளை கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவர் முன்னிலையிலும் வாசித்தனர். 

 

இதில் கலந்து கொண்ட பொதுமக்கள், பல்வேறு கோரிக்கைகளை அளித்தனர். அப்போது ஒன்றிய கவுன்சிலர் சௌபாக்கியம் என்பவரின் கணவர் கதிரேசன், “ஆறுமுகம் என்பவரின் மனைவி கடத்தல் மது பாட்டில் விற்பனை செய்ததற்காக கடந்த மே மாதம் 30 ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கடந்த 23ஆம் தேதி தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் சிறையில் இருந்த நாட்களிலும் அவர் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்ததாக அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கிராமத்தில் இறந்து போன சிலரின் பெயரிலும் வேலை செய்ததாக பணம் அளிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்தவருக்கும், இறந்து போனவர்களுக்கும் பதிலாக ஆள் மாறாட்டம் செய்யப்பட்டுள்ளது” என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார். 

 

இதனால் கிராம சபை கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் அந்த ஊராட்சியில் நிரந்தர ஊராட்சிச் செயலாளர் இல்லாததால் பல குழப்பங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் அவசர அவசரமாக கூட்டத்தை முடித்து விட்டு புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. பிறகு கூட்டமும் கலைந்து செல்ல, ஆறுமுகமும் அவரது மனைவியும் கதிரேசனை வழிமறித்து அவரை தாக்கியதாக கூறி கதிரேசன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கண்டாச்சிபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.