கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளதால் மலையேற்றப் பயிற்சிக்குச் செல்ல வனத்துறை திடீர் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மேட்டூர் பச்சைமலை, தேனி மாவட்டம் குரங்கணி, களக்காடு, முண்டந்துறை உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் மலையேற்றப் பயிற்சிக்கான (டிரக்கிங்) பிரத்யேக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மலையேற்றப் பயிற்சிக்கென ஒவ்வொரு பகுதியிலும் தன்னார்வலர்கள் கொண்ட குழுவும் இயங்கி வருகிறது. இப்பயிற்சிக்கு செல்வோர் அதற்காக சம்பந்தப்பட்ட வனச்சரகர், மாவட்ட வன அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் கடந்த 2018- ஆம் ஆண்டு, தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் காட்டுத்தீயில் சிக்கினர். இந்த சம்பவத்தில் 20- க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி பலியாயினர்.
இந்தக் கோர சம்பவத்தை அடுத்து, கோடைக்காலத்தில் மலையேற்றப் பயிற்சிக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இப்போது மீண்டும் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மலைப்பகுதிகளில் காட்டுத்தீயும் பரவி வருகிறது. இதையடுத்து நடப்பு ஆண்டிலும் மலையேற்றப் பயிற்சிக்குத் தடை விதித்து தமிழக வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஏற்காடு மலை, மேட்டூர் பச்சை மலை, ஆத்தூர் கல்வராயன் மலை ஆகிய இடங்களில் மலையேற்றப் பயிற்சிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் முருகன் அறிவித்துள்ளார். இதனால் கோடைக்காலம் முடியும் வரை மலைப்பகுதியில் டிரக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''கோடைக்கால தீ விபத்து நேரங்களில், காட்டுக்குள் சென்று யாரும் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக மலையேற்றப் பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் தீத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள வனத்துறை ஊழியர்களை முடுக்கிவிட்டுள்ளோம். விறகு எடுப்பதற்கும், கால்நடை மேய்ச்சலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அனைத்து மலைக்கிராமங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,'' என்றனர்.