![Dead farmer trapped in electric fence!](http://image.nakkheeran.in/cdn/farfuture/ADwx52gkC2Dc_EBSZZNiIYRi5hR2cMI764wLo8yray8/1625307525/sites/default/files/inline-images/died-1_16.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது வி.சித்தாமூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாள் என்பவரது மகன் ஏழுமலை. 50 வயது விவசாயியான இவர் நேற்று (02.07.2021) காலை அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் வளரும் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்குச் சென்றுள்ளார். காலையில் சென்றவர் மாலைவரை வீட்டுக்குத் திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அவரைத் தேடி விவசாய நிலத்துக்குச் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது அவரது நிலத்துக்கு அருகில் வனத்துறையில் இருந்து விவசாய நிலத்திற்கு விவசாயப் பயிர்களைச் சாப்பிடவரும் காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி ஏழுமலை உயிரிழந்து கிடந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து தகவல் அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்குத் தெரிவித்துள்ளனர். அங்கிருந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அதில் ஏழுமலை நிலத்தின் பக்கத்து நிலத்து உரிமையாளர் முனிகிருஷ்ணன் என்பவர் மின்வேலி அமைத்திருப்பது தெரியவந்தது. அதில் சிக்கி ஏழுமலை இறந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், ஏழுமலை சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்திவருகிறார். விவசாய நிலத்தில் விளைந்துள்ள பயிர்களைச் சாப்பிடுவதற்காக வனத்துறைக்கு சொந்தமான காடுகளிலிருந்து வரும் விலங்குகளைத் தடுப்பதற்காக அப்பகுதியில் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அரசு மற்றும் மின்வாரியத்திற்குத் தெரியாமல் இதுபோன்று திருட்டுத்தனமாக மின்வேலி அமைப்பதும் அதில் விவரம் தெரியாத அப்பாவிகள் அந்த வழியே செல்லும்போது அதில் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.