
கடந்த 31 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் அடுத்த நாள் (பிப்ரவரி 1 ஆம் தேதி) 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் அதானி குழும விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மூன்று நாட்களாக முடங்கின.
இதனைத் தொடர்ந்து நான்காவது நாளாக இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. அதில் மக்களவை கேள்வி நேரத்துடன் தொடங்கிய போது மீண்டும் எதிர்க்கட்சிகள் அதானி குழும விவகாரத்தை எழுப்பிய நிலையில் சபாநாயகர் மதியம் 12 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.
அதன் பிறகு மீண்டும் கூடிய மக்களவையில் பேசிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ''நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக அங்கம் வகிப்பதில் பெருமை கொள்கிறோம். நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் உரையில் இந்த வருடம் திருவள்ளுவரை மறந்து விட்டீர்கள். காரணம் தமிழ்நாட்டில் எந்த தேர்தலும் இல்லை என்பதால். இருந்தாலும் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்' என்ற திருக்குறளை வாசித்தார். அப்பொழுது எதிர்த்தரப்பு உறுப்பினர் புரியவில்லை எனக் கருத்து தெரிவிக்க, ''நான் மொழியாக்கம் செய்கிறேன். நீங்கள் தென்னிந்திய மொழிகளை கற்றுக்கொள்ள முயற்சி செய்வதில்லை ஆனால், இந்தியை மட்டும் திணிக்க முயல்கிறார்கள். அதனால் தென்னிந்திய மொழிகளை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சிகள், மக்கள், பத்திரிகை உங்களிடம் சொல்ல நினைப்பதை நீங்கள் கேட்க நேரம் ஒதுக்க வேண்டும்'' என உரையை தொடர்ந்தார்.