
அரசியல் எனும் கல்விச்சாலையில் மழலை பள்ளிக்கூடத்தில் இருப்பவர்களுக்குப் பதில் சொல்ல முடியாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த காலங்களில் தொடர்ந்து வந்த தேர்தலில் திமுகவின் வெற்றிக்குத் தொடர்ந்து உழைத்தவர் உதயநிதி. சமூக வலைதளங்களில் வாரிசு அரசியல் என யார் சொல்லுகிறார்கள். பாஜகவிலும் அமைச்சர்களாக இருப்பவர்களின் மகன்கள் அரசியலில் இருக்கிறார்கள். ஜெயக்குமார், ஓபிஎஸ் மகன்களும் அரசியலில் உள்ளார்கள்.
இயக்கத்தின் வெற்றிக்கு உழைத்து இளைஞர்களை ஈர்த்து தேர்தல் நேரத்தில் மக்கள் செல்வாக்குடன் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி உழைத்து மக்கள் செல்வாக்குடன்தான் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். திமுக வளர்கிறது என்று நினைப்பவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற கருத்தை முன்வைக்கலாம்.
அண்ணாமலை விமர்சனம் செய்வதாகக் கூறுகிறார்கள். அரசியல் எனும் கல்விச்சாலையில் மழலை பள்ளிக்கூடத்தில் இருப்பவரைப் பற்றி கேட்கிறீர்கள். அவர் அரசியலுக்கு வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது. அது ஒரு ஆரம்பப்பள்ளி. அந்தப் பள்ளியில் படிக்கும் நபருக்கு பதில் பேச முடியாது. ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தால் மட்டும் போதாது. எத்தனை சதவீதம் வாக்குகளை வாங்குகிறார்கள். இல்லாத ஒரு நபரை இருப்பது போல் காட்டவேண்டாம்” என்றார்.