2021 சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில், அதிமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏவும் அமைச்சருமான கடம்பூர் ராஜு போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக கே.சீனிவாசன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் கதிரவன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மா.கோமதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு, அக்கட்சியின் தென்மண்டல செயலாளர் மாணிக்கராஜா தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளார். இது அதிமுகவுக்கு நெருக்கடி தரும் வகையில் உள்ளதாக ரரக்கள் கடம்பூர் ராஜுவிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜு, “மனசாட்சிப்படி அறிக்கை வெளியிட்டுள்ளார் சசிகலா. அம்மாவின் ஆட்சிக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார். அப்படியென்றால், மறைமுகமாக இரட்டை இலைக்கு ஓட்டுப்போட சொன்னதாகத்தான் எங்களுடைய கருத்து. அந்த வேண்டுகோளை ஏற்றிருந்தால் இன்று தினகரன் நிலையே வேறு. இந்த நிலைக்கு அவர் தள்ளப்பட வேண்டிய நிலை வந்திருக்காது. அன்று எங்களுடைய வேண்டுகோளை ஏற்கவில்லை. உடனிருந்தவர்கள் தவறாக வழிநடத்தியுள்ளனர். என்னுடைய வேண்டுகோளை ஏற்றால் என்றைக்கும் நல்லது நடக்கும். அந்த வகையில் தேர்தல் முடிந்த பிறகும் சில வேண்டுகோளை அவருக்கு வைக்க கடமைப்பட்டுள்ளோம், வைப்போம். இன்னும் காலம் கடந்துவிடவில்லை.” என்றார்.