கடந்த சில நாட்களுக்கு முன்பு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கேரள மாநிலத்தில் ரூ.2,000 கோடிவரை சொத்து உள்ளது என தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார். இந்தச் சம்பவம் அ.தி.மு.க. கட்சியினர் மட்டுமில்லாமல் பொதுமக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தங்க தமிழ்ச்செல்வனுடன் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.விற்கு சென்றபோது அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர், தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அ.தி.மு.க. நகரச் செயலாளர் அருண்குமார். அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேரளாவில் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துவாங்கி உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் அவதூறு பரப்பி வருகிறார். அதுவும் மலையாள பத்திரிகையில் வந்த செய்தியை வைத்துக்கொண்டு பேசி இருக்கிறார்.
இந்த அவதூரை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் அ.தி.மு.க. கட்சிக்கு வரும்போது ஏதும் இல்லாதவர் தங்க தமிழ்ச்செல்வன். பிறகு, 2 முறை எம்.எல்.ஏ., 1 முறை எம்.பி.யாக இருந்து, தற்போது சென்னை வீடு, தேனி மாவட்டம் கம்பத்தில் வீடுகள், கடைகள், உள்ளிட்ட ஏகப்பட்ட சொத்துகளை வாங்கியுள்ளார். ஏன், நான் அவருடன் இருக்கும்போது என் பெயரில்கூட மேகமலையில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு சொத்துகள் இருந்தது.
அதனைக்கூட நான், அவரைவிட்டு வரும்போது (அவருடன் உள்ள) வேறு ஒருவருக்கு பவர் கொடுத்துவிட்டுத்தான் வந்தேன். தற்போது தங்க தமிழ்ச்செல்வனுக்கு ரூ.100 கோடிவரை சொத்துகள் உள்ளன. இதற்கு எல்லாம் எங்களிடம் ஆதாரம் உள்ளது. எனவே, தங்க தமிழ்ச்செல்வன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும்” எனக் கூறினார்.