நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து, வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரதமராக மோடி பதவி ஏற்க இருப்பதாகவும், அவருடன் மந்திரிகளும் பதவி ஏற்பார்கள் என்றும் ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மே 30-ம் தேதி நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொள்ள ரஜினிகாந்துக்கு மோடி அழைப்புவிடுத்துள்ளார். நட்பு அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தர்பார் படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் ரஜினிகாந்த், 30 ஆம் தேதி மும்பையில் இருந்து டெல்லி சென்று மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார் ரஜனி. அப்போது, ஏற்கனவே சொன்னதுபோல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதித்துள்ளார். இந்த நிலையில் மோடி பதவியேற்புக்கு செல்லும் அவர், அங்கு அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நண்பர்கள், ஊடகத்தைச் சேர்ந்தவர் என பல்வேறு தரப்பினரிடம் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்தது குறிப்பிடத்தக்கது.