மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "புதுச்சேரியில் ஆளும் பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு கல்வியை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்வி என்பது அவசியமானது. அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மூடப்பட்ட அரசு பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த 5 லட்சம் மாணவர்கள் தனியாரில் இருந்து அரசு பள்ளிக்கு வந்துள்ளனர். புதுச்சேரியில் 20,000 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். அவர்களை மீண்டும் தனியார் பள்ளிக்கு அனுப்பும் முயற்சியை அரசு செய்து வருகிறது.
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஏழை எளிய மக்களுக்கான பட்ஜெட் இல்லை. கார்ப்ரேட் நிறுவனங்களுக்காக போடப்பட்ட பட்ஜெட். மத்திய அரசு உணவு வழங்கும் திட்டத்தில் மானிய விலையில் அரிசி திட்டத்தை ரத்து செய்துள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை மீண்டும் கொண்டு வர வேண்டும். 2014ல் மோடி பிரதமராக பதவியேற்ற போது அதானியின் சொத்து மதிப்பு 50,000 கோடியாக இருந்தது. தற்போது 10 லட்சம் கோடியாக உள்ளது. எனவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நடத்தப்படும் அரசு மத்திய பா.ஜ.க அரசு. இவர்கள் எப்படி மக்களுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும். வருகிற 27 மற்றும் 28 தேதிகளில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதானி விவகாரத்தில் உச்சநீதிமன்ற மேற்பார்வையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. கார்ப்பரேட் நிறுவனங்களில் குறைவான வரி செலுத்துபவர் அதானி மட்டும்தான்.
பா.ஜ.க என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் நடந்து வந்தாலும் பா.ஜ.க பிரதிநிதியான ஆளுநர் தமிழிசை தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். ஆளுநர் இதை செய்யக்கூடாது. புதுச்சேரி அரசு ரேஷன் கடைகளை திறக்க வேண்டும், மாநில அந்தஸ்தை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று தனது தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் ரங்கசாமி கூறினார். ஆனால் இவை இரண்டுக்கும் ஆளுநரும், மத்திய அரசும் செவி சாய்க்கவில்லை. அப்படி இல்லையென்றால் பதவியை ராஜினாமா செய்வேன் என முதலமைச்சர் கூறி வெளியே வரட்டும். இரட்டை வேடம் போட வேண்டாம்" எனக் கூறினார்.