தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து முதல்வராகியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். திமுகவின் தேர்தல் அறிக்கையில் தந்துள்ள உறுதிமொழிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக அறிவித்த தேர்தல் அறிக்கையில் மிக முக்கியமானது, நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பது. இந்த நிலையில், கலைவாணர் அரங்கில் இன்று (11.05.2021) காலையில் சட்டமன்றம் கூடுகிறது. தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார் தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி.
சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோருக்கான தேர்தல் நாளை (12.5.2021) நடக்கிறது. இந்த இரு பதவிகளுக்கும் போட்டியிருக்காது என்பதால், திமுக நிறுத்தியுள்ள அப்பாவு, பிச்சாண்டி இருவரும் முறையே சபாநாயகராகவும் துணை சபாநாயகரகாவும் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த இரண்டு நாள் நிகழ்வுகளுக்குப் பிறகு சட்டமன்றம் ஒத்திவைக்கப்படும் என தெரிகிறது. அதேசமயம், நடப்பாண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது. அதனால், 2021 - 22க்கான முழு பட்ஜெட் அடுத்த மாதம் (ஜூன்) தாக்கல் செய்ய ஸ்டாலின் அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்கான பணிகளில் கவனம் செலுத்திவருகிறார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு புதிய சட்ட மசோதாக்களை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்திருக்கிறார். இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட மசோதா நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்ற ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.
அதேசமயம், நடப்பு கல்வியாண்டிலேயே நீட் தேர்வு நீக்கப்பட முதல்வர் ஸ்டாலின் முயற்சித்து வெற்றிகாண வேண்டும் என்பது மருத்துவப் படிப்பு கனவில் இருக்கும் தமிழக மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.