அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில் மறுபுறம் அதிமுகவை கைப்பற்ற போவதாக தெரிவித்துவந்த சசிகலா அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கி பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆதரவுகோரி வருகிறார்.
இந்நிலையில் அரசியல் பயணம் ஒன்றில் பேசிய சசிகலா, ''அதிமுக எத்தனையோ கழகத் தொண்டர்களின் இன்னுயிரை தியாகம் செய்து, எம்ஜிஆரின் கடின உழைப்பால் உருவாக்கிய இயக்கம். ஏதாவது சூழ்ச்சிகளை செய்து தாங்கள் உயர்பதவிகளில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதற்காக சாதாரண கழகத் தொண்டர்கள் பதவிக்கு வருவதற்கு முட்டுக்கட்டை போடுவது எந்த விதத்தில் நியாயம். இது கழகத் தொண்டர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம். ஒரு சிலரின் மேல்மட்ட அரசியலுக்கு அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா?
சிலரின் சுய விருப்பு, வெறுப்புக்காக இரட்டை இலை சின்னத்தை இதுபோன்று முடக்குவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. கட்சியா? ஆட்சியா? இவை இரண்டில் எதை காப்பாற்ற வேண்டும் என்ற நெருக்கடியான சூழ்நிலை வந்த போதெல்லாம் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தொண்டர்களின் நலனைக் கருத்தில்கொண்டு கட்சியைக் காப்பாற்றினார்கள். ஆனால் இன்று கட்சிக்காக உழைத்த அப்பாவி தொண்டர்கள் வீதியில் இருக்கிறார்கள். சும்மா 20-10 பேரை தனக்கு ஆதரவாகப் பேச வைத்துவிட்டு நான் தான் தலைமை என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு வலுக்கட்டாயமாக நாற்காலிகளைப் பிடித்துக் கொண்டு இருந்தால் தலைவராக ஆகிவிட முடியாது'' என்றார்.