தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. இதற்கு 10 ஆண்டுக்கால ஆட்சியிலிருந்த அதிமுகவே காரணம் என திமுக சார்பில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
இந்நிலையில் மழைநீர் வடிகால் பணிகளில் முறையான திட்டமிடல் இல்லை எனத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்தப் பள்ளம் கழிவு நீருக்கு? எந்தப் பள்ளம் மழைநீருக்கு என்று தெரியாத அளவிற்கு ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டுள்ளது. வடிகால் பணிகளில் முறையான திட்டமிடல் இல்லாததால் சாலைகள் ஆங்காங்கே தோண்டப்பட்டுக் கிடக்கின்றன. எனவே சாலைகளில் மக்கள் கவனமுடன் செல்ல வேண்டும். குடிநீரைக் காய்ச்சிப் பருக வேண்டும். ஐந்தாண்டுகள் சென்னை மேயராகவும் 5 ஆண்டுகள் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்த ஸ்டாலின் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவோம் என்று அலங்கார வார்த்தைகளால் அபிஷேகம் செய்தார்.
அவர் மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாகச் சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை உருவாக்கி வெள்ளம் தேங்காத நிலையை ஏற்படுத்தியிருந்தால் எங்களுடைய பத்தாண்டுக்கால ஆட்சியில் நாங்கள் எதுவும் செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக 5 ஆண்டுகளும், உள்ளாட்சித் துறை அமைச்சராக ஐந்தாண்டுகளும் இருந்தபோது ஒரு துரும்பும் கிள்ளிப் போடவில்லை. இதனால் கடந்த அதிமுக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியது. சென்னைக்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுமைக்கும் எங்கள் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை மக்கள் நன்கு அறிவார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.