ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்த போதே அவரை இங்கே நியமிக்க வேண்டாம் அரசியல் குழப்பங்களை உருவாக்குவார் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அப்போதே சுட்டிக் காட்டினோம் என விசிக தலைவர் திருமா தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''தமிழகம் வேறு தமிழ்நாடு வேறு என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவதே ஒரு குதர்க்கவாதம். இரண்டும் ஒன்றுதான். ஆனாலும் இரண்டுக்கும் இடையிலேயே இடைவெளியை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஒரு உரையாடலை ஆளுநர் தொடங்கி வைத்திருக்கிறார். அது வெறும் சொல் விளையாட்டு அல்ல, கருத்தியல் தொடர்பான முரண் என்பதை நாம் உணர்கிறோம். ஆகவே தான் அவருடைய போக்குகள் தமிழ் இனத்திற்கு விரோதமாக இருக்கிறது. குறிப்பாக திராவிட கருத்தியலுக்கு எதிராக இருக்கிறது. சமூக நீதி அரசியலுக்கு எதிராக இருக்கிறது என்று அவ்வப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக் காட்டி வந்திருக்கிறது.
அவரை ஆளுநராக நியமித்த போதே அவரை இங்கே நியமிக்க வேண்டாம் அரசியல் குழப்பங்களை உருவாக்குவார்; பதற்றத்தை ஏற்படுத்துவார்; நாகலாந்தில் அதற்கான சான்றுகள் இருக்கிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அப்போதே சுட்டிக் காட்டி எதிர்ப்பு தெரிவித்தோம். இன்றைக்கு அது உண்மையாகி வருகிறது. ஆளுநர் உண்மையாக்கி கொண்டு இருக்கிறார். சட்டப்பேரவையில் அவர் நடந்து கொண்ட போக்கு என்பது தனிப்பட்ட முறையில் அவருடைய நடவடிக்கையாக நாம் பார்க்கவில்லை. தனிநபர் நடத்தையோடு தொடர்புடையது என்று விடுதலைச் சிறுத்தை கட்சி பார்க்கவில்லை. அவர் உள்வாங்கி இருக்கக்கூடிய அரசோடு தொடர்புடையது. அவர் உள்வாங்கி இருக்கிற கருத்துகளோடு தொடர்புடையது. அவர் இங்கு நிலைநாட்ட விரும்புகிற சனாதன அரசியலோடு தொடர்புடையது. ஆகவேதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு நாட்களுக்கு முன்பு 'ஆளுநரே திரும்ப போ...' என்ற முழக்கத்தை முன்வைத்து மாபெரும் முற்றுகை அறப்போராட்டத்தை நடத்தினோம்'' என்றார்.