தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கர விழாவில் பங்கேற்பதற்கான யாத்திரையை துவக்கி வைப்பதற்காக மயிலாடுதுறை அடுத்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று வந்திருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இயக்கத்தினரும், அரசியல்கட்சிகளும் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் பாஜக சார்பில் ஆளுநருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.
ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டி திமுக உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பொழுது ஆளுநர் ரவி சென்ற வாகனத்தின் மீது கல் எறியப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ''தமிழக ஆளுநர் வாகனத்தின் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு தமிழக முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார். உயர் பொறுப்பில் இருக்கக்கூடிய ஆளுநருக்கே பாதுகாப்பில்லை எனில் சாதாரண மக்களுக்கு எப்படி இந்த அரசு பாதுகாப்பு அளிக்கும். சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைவதை அதிமுக ஒருபோதும் ஏற்காது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.