திராவிட மாடல் அரசின் மீது நாள்தோறும் பொய்களையும் அவதூறுகளையும் எடப்பாடி பழனிசாமி அள்ளி வீசுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு கூட்டணி கிடைக்காமல் அல்லாடும் பழனிசாமி, அதிமுக வில் நடக்கும் மோதல்களை கட்டுப்படுத்த வழி தெரியாமல் திணறும் பழனிசாமி இல்லாததையும் பொல்லாததையும் உளறிக் கொண்டிருக்கிறார். அவருடைய பொய் குற்றச்சாட்டுகளுக்கு அரசின் சார்பாக பதில்கள் அளித்தாலும் அவற்றை புறக்கணித்து மீண்டும் மீண்டும் பொய்களையே முன் வைக்கிறார்.
திருப்பூர் மாவட்டம், அவினாசிபாளையம், அழகுமலைக்கு அருகே உள்ள சேமலைக்கவுண்டன் பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களது உத்தரவின் பேரில் உடனடியாக ஏழு சிறப்பு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது தமிழ்நாடு காவல்துறை.
கொலையாளிகள் 6 பவுன் தங்க சங்கிலியையும், கொலை செய்யப்பட்ட செந்தில் குமாரது செல்போனையும் எடுத்து சென்றுள்ளனர். திருட்டுக்காக நடந்த சம்பவமா இல்லை வேறு காரணங்களுக்காக நடந்த சம்பவமா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவிலேயே கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள். ஆனால் செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத எடப்பாடி பழனிச்சாமி தனிநபர் குற்றங்களையும் ஆதாய கொலைகளையும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று மீண்டும் மீண்டும் புலம்பிக் கொண்டிருக்கிறார். மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் கடிதம் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். போராட்டம் நடத்தவிருந்த மக்களைச் சந்தித்து மக்கள் எடுக்கும் முடிவுக்கு 100% தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் குரலாக அறிவித்த பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வழக்கமாக தொலைக்காட்சியில் செய்தி தெரிந்து கொள்ளும் எதிர்கட்சி தலைவர் இன்று டிவியையும் பார்க்காமல் அதிமுக சார்பில் போராட்டங்களில் கலந்துகொள்வோம் என அறிவித்துள்ளார். வேளாண் பாதுகாப்பு மண்டலமாக டெல்டா மாவட்டங்கள் என்று அறிவித்து சூழலியல் பாதுகாப்புக்கான பரிந்துரையை ஒன்றிய அரசுக்கு பழனிசாமி அரசு அனுப்பவே இல்லை என்ற தகவலை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் டாக்டர் கனிமொழி கேட்ட கேள்விக்கு பதிலாக அளித்தது. இந்த உண்மையை மறைத்து போலி பாராட்டுகளில் நனைந்து கொண்டிருக்கிறார் பழனிச்சாமி. ஜி.எஸ்.டி வரி வாடகைக் கட்டடங்களுக்கு 18 சதவீதம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து திமுக அரசு, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு, இதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என சொல்லியிருக்கிறார் பழனிசாமி.
அதிக வரி விதிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் மீது ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடக்கும் போதெல்லாம் அதில் பங்கேற்கும் நம்முடைய நிதி அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஜி.எஸ்.டி வரி அல்ல. அது வழிப்பறி என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். வாடகைக் கட்டடங்களுக்கு 18 சதவீதம் வசூலிக்கப்படுவதை திமுக கடுமையாக எதிர்க்கிறது.
ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் வருவாயில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகிறது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. தொடர்ந்து ஏழைகளையும் நடுத்தர மக்களையும் வஞ்சிக்கும் ஜிஎஸ்.டி வரியை மோடி அரசு கொண்டு வந்த காலத்தில் இருந்து எதிர்க்க துணிவில்லாமல் அமைதியாக இருந்த பழனிசாமி, இன்றைக்கு ஏனோ அதுபற்றி பேசுகிறார். அதுவும் ஒன்றிய அரசை எதிர்த்தோ அல்லது ஜிஎஸ்டியை வரி விதிப்பை கண்டித்தோ பேசாமல் பந்தை திரு மு.க.ஸ்டாலின் அரசு பக்கம் திருப்பி, ‘திமுக அரசு, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சொல்லியிருக்கிறார்.
ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15 ஆவது நிதி ஆணையம் தனது அறிக்கையில், 2022-2023 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு 2021-22 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு “ஆண்டுதோறும் சொத்துவரி வீதத்தை உயர்த்திட வேண்டும்” என நிபந்தனைகளை விதித்துள்ளது' அதேபோல ஒன்றிய அரசின் 'தூய்மை இந்தியா திட்டம்' மற்றும் அம்ரூட் 20 ஆகியவற்றுக்கும் இதே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஒருவேளை தமிழ்நாடு இதை கடைபிடிக்காத பட்சத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021-26 வரை நமக்கு கொடுக்கப்பட வேண்டிய ஒன்றிய அரசின் மானியம் ரூ.4,36,361 கோடி நிறுத்தி வைக்கப்படும். அதோடு தூய்மை இந்தியா திட்டம் , அமரூட் 20 திட்டம் ஆகியவற்றிற்கான நிதியும் ஒதுக்கப்படாது. ஒன்றிய அரசு இப்படி கடுமையான விதிகளை 15 வது நிதி ஆணையத்தின் மூலம் விதித்தபோது அவர்களோடு நட்புறவில் இருந்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது தமிழ்நாடு அரசு தான் சொத்து வரி உயர்வுக்கு காரணம் என்று சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது.
உட்கட்சி மோதல்களையும், கூட்டணிக்கு கட்சிகளை ஈர்க்க முடியாத இயலாமையையும் மறைப்பதற்காக திராவிட மாடல் அரசை தினந்தோறும் குறை சொல்லிக் கொண்டே இருக்கும் எடப்பாடி பழனிசாமியே! உங்கள் பேச்சை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்'' என்றார்.