வில்லிவாக்கம் தொகுதி 2 ½ லட்சம் வாக்குகளைக் கொண்டது. இத்தொகுதி, திருமங்கலம் மேல்நிலை தண்ணீர்த் தொட்டி பகுதி, வில்லிவாக்கம், அண்ணாநகர் மேற்கு, ஐ.சி.எஃப், அயனாவரம், ஓட்டேரி, கெல்லீஸ் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். இத்தொகுதியில் அதிமுக, ஜே.சி.டி. பிரபாகர், திமுக வெற்றியழகன், நாம் தமிழர் இரா ஸ்ரீதர், மக்கள் நீதி மய்யம் ஸ்ரீஹரன், தேமுதிக சுபமங்களம் டில்லிபாபு ஆகியோர் களம் காணுகிறார்கள்.
இந்தத் தொகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பது, நீயூ ஆவடி சாலையில் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்குதல், ரெயில்வே கேட் அமைந்துள்ள இடத்தில் சுரங்கப்பாதை அமைத்தல் எனப் பல கோரிக்கைகள் இருந்து வந்தாலும், பழமை வாய்ந்த சிங்காரம் பிள்ளை அரசு உதவிபெறும் பள்ளி ஆக்கிரமிப்பை மீட்கவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பெரிய கோரிக்கையாக உள்ளது.
இத்தொகுதியில் அதிமுக, திமுக இருமுனைப் போட்டி நிலவுகிறது. அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளராக ஜே.சி.டி.பிரபாகர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், மா.செவான வெங்கடேஷ் பாபு இத்தொகுதியில் சீட் கேட்டு ஒதுக்கப்படாததால், ஜே.சி.டிபிரபாகரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் சுணக்கம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது. இது அதிமுகவிற்கு பலத்த அடியாக உள்ளதாம்.
அதேநேரத்தில், திமுக வேட்பாளர், நான் வெற்றி பெற்றால் இந்தத் தொகுதி கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவதாகவும், அதேபோல் அயனாவரத்தில் மகளிர் கல்லூரி ஒன்றைக் கட்டித் தருவதாகவும் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.