விக்கிரவாண்டி தேர்தல் சூடுபிடித்துள்ளது. பிரதான காட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்த பிறகு தேர்தல் களம் பரபரப்பை எட்டி உள்ளது. அடுத்தகட்டமாக இன்று 12 மணிக்கு மேல் திமுக, அதிமுக இரண்டு கட்சி வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். ஏற்கனவே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கந்தசாமி, இயக்குனர் கவுதமன் உட்பட 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
விக்கிரவண்டியை பொறுத்தவரை அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகமா திமுக மாவட்ட செயலாளர் பொன்முடியா என்ற போட்டி தான் உள்ளது. அதிமுக சார்பில் கிளை செயலாளர்களை பலமாக கவனித்துள்ளனர். இதனால் அதிமுக சீட்டுக்கு போட்டியிட்ட கட்சி தொண்டர்கள் பம்பரமாக வேலை செய்ய துவங்கியுள்ளனர். கூட்டணி கட்சிகளும் அதிமுக ஆட்சியின் மீது இருக்கும் அதிருப்தியை சரிக்கட்ட பலமாக உள்ளதாக மந்திரி தெம்போடு சொல்லிவருகிறார்.
திமுகவில் கட்சி பொறுப்பாளர்களை திருப்தி படுத்தப்போவதாக இன்று வரை போக்கு காட்டி கொண்டிருக்கிறார்கள் என்று அக்கட்சி தொண்டர்கள் புலம்புகின்றனர். மாவட்டத்தில் 39 பறக்கும் படைகளும், 319 கண்காணிப்பு குழுவும் பணியில் இறக்கப்பட்டுள்ளது. அதிமுக இதை அலட்டி கொள்ளவே இல்லையாம்.தேர்தல் செலவுக்கான பணம் முழுவதும் தொகுதி முழுக்க ஏற்கனவே பிரித்து அனுப்பப்பட்டுவிட்டதாம்.
திமுக தரப்பில் பொன்முடி எப்போதும் போல கட்சி தொண்டர்களை தட்டி கொடுத்து வேலை வாங்குகிறார். மக்கள் மத்தியில் தராசு தட்டில் எந்த கட்சி தன்னுடைய பலத்தை காட்டுகிறதோ அந்த கட்சி பக்கம் தான் கவனமாக உள்ளனர்.
இந்நிலையில் திமுக, அதிமுக கட்சி பொறுப்பாளர்கள் பணிகளை செய்ய வசதியாக அவர்களுக்கு தங்குவதற்காக இப்பொழுதே ஹோட்டல்கள் லாட்ஜ்கள் தனியார் கட்டிடங்கள் முன்பதிவு செய்ய ஆரமித்துள்ளனர். இதனால் தேர்தலின் பரபரப்பில் உள்ளது விக்கிரவாண்டி.