தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுக - தேமுதிக இடையேயான நான்காம்கட்ட பேச்சுவார்த்தை இன்று (03.03.2021) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, தேமுதிகவிற்கு 15 இடங்களை இறுதியாக ஒதுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும், வேலூர் தொகுதியில் எல்.கே.சுதீஷும், விருத்தாசலத்தில் பிரேமலதாவும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடாத நிலையில், தேமுதிகவுக்கு வாக்கு வங்கி குறைவதைச் சுட்டிக்காட்டி, தேமுதிக கேட்டத் தொகுதிகளை கொடுப்பதற்கு அதிமுக தயங்கியதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக தோல்வியைச் சந்தித்ததால், இந்தமுறை வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசி வருகிறார் பிரேமலதா. இதனிடையே தேமுதிகவுக்குச் சாதகமான தொகுதிகள் எவை என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுக கூட்டணி அமைந்தால் சென்னையில் உள்ள விருகம்பாக்கம் அல்லது விருத்தாசலம், ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளைக் குறித்து கட்சித் தலைமையிடம் கொடுத்துள்ளதாகவும், அந்தத் தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியைத் தேர்வு செய்து பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவார் என்றும் அக்கட்சியினர் சிலர் தெரிவிக்கின்றனர். விஜயகாந்த் முதன்முதலாக விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால், அந்தத் தொகுதியில் பிரேமலதா போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. விருகம்பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால், அந்தத் தொகுதியில் எளிதில் வெற்றிபெறலாம் என்று அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.