புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் கால்நடை கல்லூரிகளை இணைத்து மாநில வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து தெருவிளக்குகளிலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, மீன்களை பதப்படுத்த ரசாயனம் பயன்படுத்துவதாக புகார் வந்தால் அதை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா, அமைச்சர்கள் தங்கள் வகிக்கும் இலாக்காக்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை அவர்களது தொகுதிகளுக்கும் மட்டுமே நிறைவேற்றப்படுவதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி திட்டங்களை சீராக அனைத்து பகுதிகளுக்கும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த நாராயணசாமி, ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பினால் வரிசைப்படுத்தப்பட்டுள்ள 35 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை குடிமக்கள் தங்களின் முகவரிக்கான ஆதாரமாக சமர்பிக்கலாம் என்றும், இதற்கு அப்பகுதி சட்டமன்ற உறுப்பினரின் சான்றிதழ் கட்டாயமில்லை என தெரிவித்தார்.