வருகின்ற ஜூன் 10ஆம் தேதி நடைபெற இருக்கும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் தங்களது ஆதரவு யாருக்கு என்பது குறித்து பாமக மற்றும் பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மே 24- ஆம் தேதி தொடங்குகிறது. மே 31- ஆம் தேதி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி அதிகாரி முன்பு வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் ஜூன் 1- ஆம் தேதி அன்று தொடங்கும். வேட்பு மனுவைத் திரும்பப் பெற ஜூன் 3- ஆம் தேதி அன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிப்பதாகவும், இதனை பாஜக தலைவர் அண்ணாமலை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தகவல் தெரிவித்தார். இதனிடையே, மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவிற்கு தங்களது முழு ஆதரவையும் வழங்குவதாக பாமக அறிவித்துள்ளது.
வரும் ஜூன் 10- ஆம் தேதி அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து, ஜூன் 10- ஆம் தேதி அன்று மாலை 05.00 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி, அன்றே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.