Skip to main content

அதிமுக என்ன செய்ய வேண்டும் என சொல்ல சி.டி.ரவி யார்? - கொதிக்கும் அதிமுக நிர்வாகி

 

admk

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மறுபுறம் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு தேர்தல் களத்தில் அதிமுகவை பின்னடைய செய்துள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.

 

இந்த நிலையில், அதிமுகவின் எடப்பாடி தரப்பு மற்றும் ஓபிஎஸ் தரப்பை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் சந்தித்திருந்தனர். தமிழக நலன் கருதி அதிமுக அணிகள் இணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த சந்திப்பினை அவர்கள் நிகழ்த்தி இருந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சி.டி.ரவி, ''அதிமுக 1972 ஆம் ஆண்டு துவங்கப்பட்டபோது எம்ஜிஆர் திமுகவை தீயசக்தி என்று சொன்னார். அந்த வார்த்தை தற்பொழுது வரை பொருந்துகிறது. தற்பொழுது வரை திமுக தீயசக்தியாகத்தான் இருக்கிறது. எனவே, திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், அதிமுக அணிகள் ஒன்றிணைய வேண்டும். அதற்காகத்தான் அதிமுகவின் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்புகளைச் சந்தித்தோம்' எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், பாஜக கருத்துக்கு அதிமுக நிர்வாகி எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சிங்கை ஜீ.ராமச்சந்திரன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அதில் 'சி.டி.ரவி யார்? அதிமுக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுவதற்கு. தேசியக் கட்சி என்பதாலேயே என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா? இங்கு சி.டி.ரவி அறிவுரை வழங்கியது போல கர்நாடக பாஜக எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நாங்களும் அறிவுரை வழங்கலாமா?' எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !