நாமக்கல் மாவட்டத்தை அடுத்துள்ள சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினரின் இல்லத் திருமண விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய அவர், “முதலமைச்சர் 1 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தினை ஆரம்பித்துள்ளார். இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வந்தனர். நேற்று முதலமைச்சர் அந்த திட்டத்தை விரிவுபடுத்தினார். தற்போது அந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்து 2 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். பள்ளிக்கு வரும் மாணவர்கள் பசியோடு வரக்கூடாது என்பதற்காக இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். எந்த மாவட்டத்திற்கு சுற்றுப் பயணம் செய்தாலும் அங்குள்ள பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவை சாப்பிடுகிறேன். உணவு அனைத்தும் தரமாக உள்ளதா என ஆய்வு செய்து வருகிறேன். இங்கு பேசிய அனைவரும் செங்கல்லைப் பற்றி பேசினார்கள். நானே செங்கல் பற்றி மறந்தாலும், நீங்கள் யாரும் மறக்கமாட்டீர்கள் போல் இருக்கிறது. நாம் மறந்தாலும் எதிர்க்கட்சியினரும் மறக்கமாட்டார்கள் போலிருக்கிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு இரண்டு நாட்கள் சென்றேன். இரண்டு நாட்களில் 20 இடங்களில் பிரச்சாரம் செய்தேன். பிரச்சாரம் செய்யும்போது பொதுமக்களிடம் யாருக்கு வாக்களிக்க இருக்கிறார்கள் என்பது குறித்தும் அவர்கள் பகுதியில் இருக்கும் பிரச்சனைகள் குறித்தும் கேட்டுவிட்டுத்தான் அடுத்த பகுதிக்கு செல்வேன். ஒவ்வொரு பிரச்சாரம் முடித்துவிட்டு நான் செல்லும் போதும் முதல்வர் என்னிடம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்பார். அவரிடம் 35 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என சொன்னேன். முதல்வர் ஒருநாள் பிரச்சாரத்திற்கு தான் சென்றார். பின் நான் அவரிடம் தேர்தல் வெற்றி குறித்து கேட்டபோது அவர் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என சொன்னார். அதேபோல் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பொதுமக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர்.
தாலிக்கு தங்கம் கொடுக்கவில்லை என எதிர்க்கட்சியினர் பேசினர். அதிமுக ஆட்சியில் 3 வருடமாக அதை கொடுக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதை மீண்டும் கொடுக்க ஆரம்பித்தோம். திருமணம் ஆகி 6 ஆண்டுகள் கழித்தெல்லாம் வந்து அதை வாங்கினார்கள். அதுமட்டுமின்றி விவாகரத்து ஆனவர்கள் எல்லாம் அதை வாங்கினார்கள். அதன் பின்னர் திமுக அந்த திட்டத்தை மாற்றியது. பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக புதுமைப் பெண் திட்டத்தையும் தொடங்கினோம். மகளிருக்கான உரிமைத் தொகை மாதம் 1000 ரூபாய் திட்டத்தையும் திமுக அரசு விரைவில் அறிமுகப்படுத்தும்.” எனக் கூறினார்.