Published on 25/06/2019 | Edited on 25/06/2019
தினகரன், தங்க தமிழ்செல்வன் மோதல் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்க தமிழ்செல்வன் வெகு விரைவில் அமமுக கட்சியை விட்டு வெளியேறி அதிமுகவில் இணைவார் என்று சொல்லப்படுகிறது.தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் இணைக்க அமைச்சர் தங்கமணி மூலம் எடப்பாடி காய் நகர்த்தியதாக தெரிவிக்கின்றனர். தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலகுவது தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் அமமுகவில் இருந்து அதிமுகவிற்கு செல்லப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
![ttv](http://image.nakkheeran.in/cdn/farfuture/HhIJ3o57_WI4DHHRsC-4RSG-fMyBYbb3r1kSZI4M2Yo/1561448523/sites/default/files/inline-images/436_0.jpg)
முன்னாள் அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான பழனியப்பன் அதிமுகவில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த முயற்சியை அமைச்சர் வேலுமணியை வைத்து எடப்பாடி காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தினகரன் கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விலகி மாற்று கட்சியில் இணைந்து வருவதால் அமமுகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தினகரனுக்கு மிக நெருக்கமாக இருந்த தங்க தமிழ்ச்செல்வனை தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் திமுக அல்லது அதிமுகவில் இணைவார்கள் என்று தெரிகிறது. இதனால் அடுத்து என்ன செய்யலாம் என்று கட்சி நிர்வாகிகளிடம் தினகரன் ஆலோசித்து வருவதாக கூறுகின்றனர்.