தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு ஏப்ரல் 6- ஆம் தேதி அன்று தொடங்கிய நிலையில், மே மாதம் 10- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்று வரும், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நாள்தோறும் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் துறை சார்ந்த கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அத்துடன், பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று பொதுப்பணித் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. இதுகுறித்து அந்தத் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார். அப்போது பொதுப் பணித் துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கட்டப்படும் கட்டடங்களை பற்றி விளக்கம் அளித்தார். அதில், சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்படும் கலைஞரின் நினைவிடம் கட்டுமான பணி குறித்து பேசுகையில், ‘சென்னை மெரினா கடற்கரையில் 2.21 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.39 கோடியில் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கும் பணி இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது. கலைஞரால் எம்.எல்.ஏ. ஆனவர்கள் 500 பேருக்கும் மேல் இருப்பார்கள். எம்.பி.க்கள் ஆனது 200 பேருக்கும் மேல் இருப்பார்கள். அமைச்சர்கள் ஆனது 100 பேருக்கும் மேல் இருப்பார்கள். ஆனால், அத்தனை பேருக்கும் கிடைக்காத வாய்ப்பை எனக்கு அவர் கொடுத்ததற்காக காலம் உள்ளபடியே அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்’ என்றார். அப்போது, அவர் நெகிழ்ச்சியினால் கண்கலங்கினார். குரலும் கம்மியது. ஆனாலும் அதை சமாளித்து தொடர்ந்து தனது உரையை நிகழ்த்தினார். அப்போது சட்டமன்றத்தில் உறுப்பினர்களும் சிறிது உணர்ச்சிவசப்பட்டனர்.